கூட்டணியே இறுதியாகாத நிலையில் 234 தொகுதிகளுக்கு விருப்ப மனு அறிவிப்பு வெளியிட்ட பிரேமலதா: இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்பனு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேமுதிகவின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் சட்டமன்ற பொதுத் தேர்தல் விருப்ப மனுக்களை 6ம் தேதி(இன்று) முதல் 12ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12ம் தேதி(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



