இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. National Council for Hotel Management and Catering Technology என்பது 1982ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் உணவக மேலாண்மை கல்வி உள்ளிட்ட வரவேற்புத்துறை கல்வியை ஒழுங்குப்படுத்தி, ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் சுய அதிகாரம் உள்ள மத்திய அரசால் நடத்தப்படும் குழுமமாகும். இது 1984ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின்கீழ் இயங்கிவருகிறது. இக்குழுமத்தின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை நடத்துகிறது.
NCHMCT வழங்கும் படிப்புகள்
இளநிலைப் பட்டப்படிப்புகள் (Under Graduate ): B.Sc (Hospitality & Hotel Administration), B.Sc (Hospitality & Hotel Adminstration - Generic), B.Sc (Hospitality & Hotel Administration, specialisation).
முதுநிலை பட்டப்படிப்புகள் (Post Graduate): M.Sc (Hospitality Administration), Post-Graduation Diploma in Accommodation operation & Management.
பட்டயப் படிப்புகள் (Diploma): Diploma in Food Production, Diploma in Food and Beverage Service, Diploma in House keeping Operations,Diploma in Front Office Operations.
சான்றிதழ் படிப்புகள் (Certificat Course): Food Production & Patisserie, Food & Beverage Services
NCHMCT-யின் கீழே இயங்கும் நிறுவனங்கள்
NHMCT அங்கீகாரத்துடன் 21 மத்திய அரசின் உணவக மேலாண்மைக் கல்வித்துறை நிறுவனங்களும், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் 29 கல்வி நிறுவனங்களும், 24 தனியார் உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் 1 கல்வி நிறுவனம், 12 Food Crafts நிறுவனங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்குகின்றன.
மத்திய அரசின் நிறுவனங்கள், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, காந்திநகர், கோவா, குர்தாஸ்பூர், கௌஹாத்தி, குவாலியர், வைஷாலி(பீகார்), ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புதுடெல்லி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் உள்ளன. சென்னைக்கு அருகே உள்ள முக்கிய உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (IHMS) கோழிக்கோடு, திருச்சி, புதுச்சேரி, ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம்-திருப்பதி போன்ற இடங்களில் உள்ளன.
சென்னையில் உள்ள தனியார் உணவக மேலாண்மை கல்வி நிறுவனங்கள் வேல்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனம், எஸ் ஆர் எம் உணவக மேலாண்மை கல்வி நிறுவனம். அதேபோல் அஜ்மீர், அலிகார், டார்ஜிலிங், உதய்பூர், அஸ்ஸாம், டோரா, ஹோசிப்பூர் போன்ற இடங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
NCHMCT JEE 2026 - நுழைவுத் தேர்வு
பொதுவாக இப்படிப்புகளுக்குத் தகுதியான மாணவர்கள் நுழைவுத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நுழைவுத் தேர்வு 3 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும். தேர்வில் மொத்தம் 200 MCQ வினாக்கள் கேட்கப்படும். ஆன்லைனில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் Numerical Ability and Analytical Aptitude-30 questions, Reasoning and Logical Deduction-30 questions, General Knowledge & Current Affairs-30 questions, English Language-60 questions, Aptitude for Service Sector-50 questions என்ற அடிப்படையில் 200 வினாக்கள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வினாவுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும். பட்டயப்படிப்புகளுக்கு ஒன்றரை மணிநேரம் தேர்வு நடைபெறும்.
நுண்ணறிவுப் பகுதியைத் தவிர மற்ற பிரிவுகளில் தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். நுண்ணறிவுப் பகுதிக்கு மட்டும் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது. ஆனால் இப்பிரிவுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் தரப்படும். மிகச் சரியான விடைக்கு ஒரு மதிப்பெண்ணும், இதற்குப் பிறகு சரியான தன்மைக்கு ஏற்ப 0.75, 0.50 0.25 என்ற வரிசையில் மதிப்பெண்கள் தரப்படும்.
விண்ணப்பிக்கத் தகுதி
இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போது 12ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டாயம் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். OBC மாணவர்களுக்கு அதிகப்படியான வயது வரம்பு 22, SC/ST/PWD பிரிவு மாணவர்களுக்கு அதிகப்படி வயது வரம்பு 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.1000, EWS மாணவர்களுக்கு ரூ.700, SC/ST/PWD மாணவர்களுக்கு ரூ.400, மூன்றாம் பாலினத்தவர் மாணவர்களுக்கு ரூ.450 ஆகவும் இருக்கும். இந்த கட்டண விவரத்தில் மாற்றங்களை அவ்வப்போது வெளிவரும் விளம்பரம் மற்றும் வலைத்தள அறிவிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கிய நாட்கள்: விண்ணப்பங்களும் அறிவிப்பும் டிசம்பர் (2025) 3 அல்லது 4வது வாரம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கிடைக்கும். விண்ணப்பிக்க இறுதி நாள் ஏப்ரல்(2026) இரண்டாம் அல்லது மூன்றாம் வாரங்களில் இருக்கும். நுழைவுத் தேர்வு ஏப்ரல்(2026) 3 அல்லது 4வது வாரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வின் முடிவுகள் ஆன்லைனில் மே(2026) இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் வரை கிடைக்கும். முதல் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்விற்கு ஆன்லைன் பதிவினை மே இறுதி வாரம் முதல் ஜூன் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்திற்குள் செய்ய வேண்டும். உத்தேசக் கலந்தாய்வு ஜூன் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரத்திற்குள் நடைபெறும். கல்லூரித் தேர்வு ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாம் வாரத்தில் நடைபெறும். முதல் சுற்று இட ஒதுக்கீடு ஜூன் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரமும், இரண்டாம் சுற்று இடஒதுக்கீடு ஜூன் இறுதி வாரமும் நடைபெறும். உடனடி இட ஒதுக்கீடு ஜூலை இரண்டாம் வாரம் நடத்தப்படும். விடுதி ஒதுக்கீடு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறும். நுழைவுத் தேர்வு குறித்த முழு விவரங்களை < https://exams.nta.ac.in/NCHM > என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
