பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலம்.. தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் SIR சதி வேலை இனி எடுபடாது : அகிலேஷ் யாதவ்
பாட்னா : பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலமாகிவிட்டது என்று தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரம் குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 203 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில் 91 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. 80 தொகுதிகளில் முன்னிலை பெற்று நிதிஷ் குமாரின் JDU 2வது இடத்தில் உள்ளது. இண்டியா கூட்டணி 34 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னிலைக்கு தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைமுறையை(SIR) குற்றம் சாட்டியுள்ள அகிலேஷ், இது "தேர்தல் சூழ்ச்சி" என கூறியுள்ளார். "SIR-ன் விளையாட்டு பீகாரில் ஆடப்பட்டுள்ளது, ஆனால் இது தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரபிரதேசத்தில் சாத்தியமில்லை. ஏனென்றால் தேர்தல் சதி இப்போது வெளிப்பட்டு விட்டது" என்று கூறியுள்ளார்."இனி இவர்களை இந்த விளையாட்டை ஆட விடமாட்டோம்" என கூறியுள்ள அகிலேஷ், சிசிடிவியைப் போன்று விழிப்பாக இருந்து பாஜகவின் திட்டங்களை முறியடிப்போம் எனவும் தெரிவித்தார்.
