Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அஜித், ரஜினியுடன் அண்ணாமலை மதுரையை கலக்கும் போஸ்டர்கள்

மதுரை: பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமீபகாலமாக அமைதியாக இருக்கிறார். மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டப் பிறகு, கட்சியில் இருந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதிருப்தியில் இருந்தார். கட்சியின் டெல்லி தலைமை தனக்கு ஏதாவது முக்கியப் பொறுப்பு வழங்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் அதுவும் நடக்கவில்லை. இதையடுத்து, பாஜ கட்சியில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி துவக்கப் போவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜ தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். அவர் விரைவில் புதிதாக தனிக்கட்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அவர் முறையான அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மாநகர் முழுவதும் அண்ணாமலை ஆதரவாளர்கள் தரப்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக அண்ணாமலை நடுவிலும் அவருக்கு வலதுபுறத்தில் நடிகர் அஜித்தும், இடது புறத்தில் நடிகர் ரஜினிகாந்தும் இருப்பது போலவும், இருவரின் கைகளையும் பிடித்த படி அண்ணாமலை நடந்து செல்வதை போலவும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில் பிரதர்ஸ் ஆஃப் அண்ணாமலை, மதுரை மற்றும் மனித கடவுள் அஜித் பக்தர்கள் என்ற பெயர்கள் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.