Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கு சவாலாகும் அபாயம்; காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 6.5 கோடி உயிரிழப்பு: சுற்றுச்சூழல் அமைப்புகள் வேதனை

* இந்திய நகரங்களின் நிலை மோசம்

காற்று மாசுபாடு என்பது மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 6.5 கோடி இறப்புகள் நிகழ்வதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளது. குறிப்பாக வளரும் நாடுகளில் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை காற்று மாசுபாடு என்பது வெகுவாக பாதிக்கிறது. இந்தவகையில் காற்று மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. எனவே சுத்தமான காற்று இந்த பூமிக்கு மிகவும் அவசியம். காற்று மாசுபட்டால் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இயற்கையை பாதிக்கும் சுற்றுச்சூழல் சீரழிவுகளும் ஏற்படும். எனவே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 15ம் தேதி சர்வதேச காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

பூமியின் வளிமண்டலத்தை பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் ஆரோக்கியமான காற்றை வழங்க வேண்டும் என்பதே இந்த நாளின் பிரதான நோக்கமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு காற்று மாசுபாடு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இது குறித்து சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: காற்று மாசு காரணமாக நிகழும் இறப்புகள் வரும் 2050ம் ஆண்டிற்குள் தற்போது உள்ளதை விட 50 சதவீதம் அதிகரிக்கும். வளர்ச்சி, உற்பத்தி திறன், நவீன கட்டமைப்பு மேம்பாடுகள் போன்றவை காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கிறது.

இந்த நிகழ்வுகளின் போது வெளியேறும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் நமது நுரையீரல், ரத்தஓட்டம் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டு உடலில் ஆழமாக ஊடுருவுகிறது. இதனால் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதேபோல் பக்கவாதத்திற்கும் காற்று மாசு காரணமாகிறது. நுரையீரல் பாதிப்பு சார்ந்த அதிகளவு இறப்புகளுக்கு சமீபகாலமாக காற்று மாசுதான் காரணம் என்பது மருத்துவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னேறி வருகிறது. அதேநேரத்தில் உலகின் மோசமான காற்றுமாசுபாடு கொண்ட 30நகரங்களில் 21நகரங்கள் இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி, உலகளவில் காற்றின் தரத்தை மிக மோசமாக ெகாண்ட நகரமாக திகழ்வதும் வேதனைக்குரியது.

அனல்மின் நிலையங்கள், வாகனங்களால் ஏற்படும் மாசு, தொழில்துறை மாசு, சமையல் மற்றும் சூடாக்கத்திற்கு மரங்கள் மற்றும் அழுக்கு எரிபொருட்களை எரிப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் காற்று அதிகளவில் மாசுபடுகிறது. காற்று மாசுபாடு என்பதை ஒரு அமைதியான கொலையாளி என்று கூட கூறலாம். இங்கு ஆண்டுக்கு 1.67மில்லியன் மரணங்கள் காற்று மாசுபாடு சார்ந்த நோய்களால் நிகழ்கிறது. இது நாட்டின் மொத்த இறப்புகளில் 17.8சதவீதமாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நகரங்களை மூடிமறைக்கும் புகைமூட்டக்காற்று பெரும்பாலும் பி.எம்.25என்னும் அபாயகரமான நுண்துகள்களை கொண்டுள்ளது.

இது உலக சுகாதார அமைப்பு கோடிட்டு காட்டியுள்ள பாதுகாப்பான வரம்பை விட 14சதவீதம் அதிகமாகும். காற்றில் கலக்கும் இந்த நுண்துகள்களே சுவாசநோய்களுக்கும், இதயநோய்களுக்கும் வழிவகுக்கிறது. தலைநகரான டெல்லியில் 2020ம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக காற்று மாசால் 54ஆயிரம் அகால மரணங்கள் நிகழ்ந்துள்ளது. காற்று மாசுபாடு என்பது புவி வெப்பமயமாவதற்கும் முக்கிய காரணியாக உள்ளது. பி.எம்.25என்ற நுண்துகள் அளவின் முக்கிய கூறு கருப்பு கார்பனாகும். இது கார்பன்டை ஆக்சைடை விட, சூரியனில் இருந்து ஒரு மில்லியன் மடங்கு அதிக சக்தியை உறிஞ்சும். எனவே கருப்பு கார்பன் போன்ற மாசுக்களை குறைப்பது புவி வெப்பமயமாவதை மெதுவாக்கும். அதுவே காற்றின் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

திட்டங்களால் குறையவாய்ப்பு

‘‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல், காற்றாலை ஆற்றலின் பங்குகளை வலியுறுத்தல், பசுமை இல்லவாயு வெளியேற்றத்தை குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுதல், தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை மேம்படுத்துதல் போன்றவை இந்த நாளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். காற்றாலை மின்சாரம், சோலார் உற்பத்திகள், பேட்டரி வாகனங்கள் போன்றவை காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் யுக்திகளாக கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் இவற்றை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் செம்மையான செயல்பாட்டுக்கு வரும் போது, காற்று மாசுபாடுகளில் பெருமளவில் குறையும்,’’ என்பதும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளின் நம்பிக்கை.