புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை குறித்த வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் ஆறு எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடத்தப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக ஆகியவை தரப்பில் இருந்து மாநிலங்களவை எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புகழேந்தி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிரீஷ் கத்மலயா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இது கோடைக்கால சிறப்பு அமர்வு ஆகும். இதுபோன்ற சூழலில் இந்த வழக்கை தற்போது விசாரிக்க முடியாது. அந்த அளவிற்கு எந்தவித அவசரமும் கிடையாது’’ என்று கூறி விசாரணையை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.