தஞ்சாவூர் அருகே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய அதிமுக நிர்வாகிகள் கைது: ரூ.3 லட்சம், 3 சொகுசு கார் பறிமுதல்
ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் ஒரத்தநாடு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் (64), தென்னமநாடு அதிமுக இளைஞரணி வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ்(53) மற்றும் ஒரத்தநாடு புதூர் சசிகுமார் (48), திருமங்கலக்கோட்டை மேலையூரை சேர்ந்த வேலாயுதம் (60), துலுக்கன் பட்டி சேகர் (56), கண்ணந்தன்குடி மேலையூர் விவேகானந்தன் (51) என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் ரொக்கம், 3 விலை உயர்ந்த சொகுசு கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இனியவன், கைதான 6 பேரும் ஒரு மாதம் தினமும் காலையில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீனில் விடுவித்தார்.


