அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் வரும் 5ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் பரபரப்பு
சென்னை: அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், வருகிற 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக போர்க்கொடி தூக்கி வருகிறார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி பகிரங்கமாக கோரிக்கை வைத்தார்.
அதை நடைமுறைப்படுத்த 10 நாள் கெடு விதிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக செப்டம்பர் 6ம் தேதி எடப்பாடி அறிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 30ம் தேதி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். எச்சரித்ததோடு நிற்காமல், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, “எடப்பாடி பழனிசாமி என்னை திமுகவின் ‘பி’ டீம் என்று கூறி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் ஏ ஓன் என்றும், துரோகத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” என்றும் பதிலடி கொடுத்தார். செங்கோட்டையன் போன்று ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா போன்றோர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம், பாஜ மேலிட தலைவர்களும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பல்வேறு பிரச்னையில் எடப்பாடி சிக்கி தவித்து வருகிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா, சாவா பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் நவம்பர் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு, தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 5ம் தேதி (புதன்) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், வருகிற 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* இன்று ஐடி நிர்வாகிகள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று (2ம் தேதி), நாளை (3ம் தேதி) அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் (பாகம்) கிளை கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, அமைப்பு ரீதியான மாவட்டங்கள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து, அவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
