அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை: அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர்; எஸ்ஐஆர் காரணமாக மக்களின் வாக்குகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்குத் திருட்டு பற்றி ராகுல் காந்தி வெளிப்படையாக, ஆதாரங்களுடன் பேசியிருக்கிறார். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை உண்மையான வாக்காளர்கள் விடுபட்டுவிடக் கூடாது.
இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். SIR விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். SIR பணிகளை நிறுத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உரிய கால அவகாசம் இல்லாமல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. SIR படிவங்களை நிரப்புவதில் மக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது. கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதற்குள் தலையே சுற்றுகிறது. மத்தியில் இருப்பவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கின்றனர். SIR-க்கு எதிராக மேற்குவங்கம், கேரள மாநில அரசுகளும் சட்டப்போராட்டம் நடத்துகின்றன.
வெற்றிக்காக மட்டும் அல்ல; மக்களின் வாக்குரிமையை காக்கும் கடமையும் உங்களுக்கு உள்ளது. SIR படிவங்களை பொதுமக்கள் நிரப்புவதற்கு திமுக பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, அவர்கள் உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது. அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள்; எஸ்.ஐ.ஆரை ஆதரித்து அதிமுக வழக்கு தொடர்ந்தது வெட்கக் கேடானது என்று கூறினார்.
