பேரவையில் நேற்று முசிறி தியாகராஜன் (திமுக) பேசுகையில், ‘‘எங்கள் தொகுதிக்கு விவசாயத்தை விட்டால் வேறு வழியில்லை. நீர்வளத் துறை அமைச்சர் நிதியில்லை என்று சொல்கிறார். இதை ஊர் மக்களிடம் சொன்னபோது, வயதான ஒருவர், ‘‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ’’ என்ற எம்ஜிஆர் பாட்டு பாடினார். (எம்ஜிஆர் பாட்டை கேட்டதும் அதிமுக உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்). இந்த பாடலின்படி, வளமான இந்தத் தமிழ்நாட்டை விட்டுவிட்டு நாம் ஏன் வெளியில் கையை ஏந்த வேண்டும்.
எனவே நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன், நமக்கான நிதியை ஒன்றிய அரசு தரவில்லை என்பது தெரிந்து விட்டது. எனவே எங்களுக்கு உங்களை (துரைமுருகன்) விட்டால் வேறு கதியில்லை. நீங்கள் மனம் திறந்தால் தான் கொல்லிமலைத் தண்ணீர் முசிறிக்கு வரும். அதேபோல காவிரி தண்ணீர் எங்களுக்கு பாயும்’’ என்றார். இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

