Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும்? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கப்படும், என்று சிபிஐ தரப்புக்கு சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என மொத்தம் 25 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேர் ஆஜராகினர். முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை 3 மாதத்தில் வழக்கு எவ்வாறு முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அதனால், சாட்சி விசாரணை எப்போது தொடங்கப்படும். எப்போது ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்து முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.