Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நுங்கம்பாக்கத்தில் தனியார் பாரில் தகராறு; அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உட்பட 6 பேர் கைது: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் போலீஸ் நடவடிக்கை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக கட்சி நிர்வாகி அஜய் வாண்டையார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக உணவகம் நடத்தி வருகிறார். ராஜா கடந்த 22ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து இருக்கையில் செல்வா என்பவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜா, போதையில் இருந்த செல்வாவை கண்டித்துள்ளார். இவர், கானாத்தூரில் தூண்டில் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் செல்வா மது குடித்து கொண்டிருந்த கண்ணாடி குடுவையை எடுத்து ராஜா மீது தாக்கினர்.

இதில் ராஜாவுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது ராஜாவும் செல்வாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இருதருப்புக்கும் இடையே பாரிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் தனியார் பார் மேலாளர் வெங்கட் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் ராஜா மற்றும் செல்வா ஆகியோர் பாரை சேதப்படுத்தி விட்டனர் என்று கூறி புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஓட்டல் உரிமையாளர் ராஜாவுக்கு ஆதரவாக நடிகர் கருணாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளரும் தற்போது அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் மற்றும் அவரது நண்பரான சுனாமி சேதுபதி ஆகியோர் ராஜா மீது வழக்கு பதிவு செய்ததை நீக்க கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று பாரில் தகராறில் ஈடுபட்ட ராஜாவுக்கு ஆதரவாக ரவுடிகள் சிலர் பாரில் செல்வா தரப்பினரை தாக்கியதாகவும், அந்த ரவுடிகளுக்கு அஜய் வாண்டையார் அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. உடனே உயர் அதிகாரிகள் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது எந்த வித தயவு தாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் கருணாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளரான அஜய் வாண்டையார், சுனாமி சேதுபதி, கணேஷ்குமார், பிரசாத், ஜாகிராம், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன் ஆகியோர் மீது தனியாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததை தெரிந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் தனது நண்பரான சுனாமி சேதுபதியுடன் தலைமறைவாகிவிட்டார். அதை தொடர்ந்து அவர்களை கைது செய்ய நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் தேனியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனி விரைந்து சென்ற உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் அதிரடியாக அஜய் வாண்டையார், சுனாமி சேதுபதி ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சென்னையில் பதுங்கி இருந்த கணேஷ்குமார், பிரசாத், ஜானகிராம், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ராஜா, பிரேம்குமார், தீபக், தனசேகர் ஆகியோரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தனியார் பாரில் ஏற்பட்ட தகாறில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக நடிகர் கருணாஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாக ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கருணாஸ் கட்சியின் வக்கீல் பிரிவு தலைவர்தான், சாலிகிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கருணாசின் டிரைவராக இருந்தவரால் படுகொலை செய்யப்பட்டார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் மீது தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராஜா கடையில் எப்போதும் ரவுடிகளும், கூலிப்படையினரும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு ராஜா முழுமையாக அடைக்கலம் கொடுத்து வந்துள்ளார். இதற்காக தனது கடையில் தனியாக அறை ஒதுக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், ராஜாவுக்கு தென் மாவட்டங்களில் நடந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.