Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சேலம் அதிமுக பிரமுகரின் மகள் கொலையில் கள்ளக்காதலன் கைது: பரபரப்பு வாக்குமூலம்

சேலம்: சேலம் ராமகிருஷ்ணா சாலை, வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (38). பி.டெக். இன்ஜினியரான இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுக முக்கிய பிரமுகரான இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி பழக்கம் உள்ளவர். பாரதி திருமணம் ஆகாதவர். சேலம் சங்கர்நகரில் டியூசன் சென்டர் நடத்தி அங்கேயே தனியாக வசித்துள்ளார். இவருக்கும், தனியார் மருத்துவமனையில் சிஓஓ உதயசரணுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதி மர்மமான முறையில் இறந்தார். ஆனுால் அவரை உதயசரண்தான் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் பாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதயசரணை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் பாரதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பாரதி முதலில் பெங்களூரில் வேலை செய்துள்ளார். அப்போது அவருக்கு மது மற்றும் சிகரெட் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சேலத்தில் குடியேறியுள்ளார். சேலத்தில் பிரபல ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகமான உதயசரணுடன் (49) பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

அவரது மனைவியும் அதே மருத்துவமனையில் அதிகாரியாக உள்ளார். நாளடைவில் உதயசரண் சங்கர்நகரில் உள்ள டியூசன் சென்டரில் தங்கி பாரதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவருக்கு பாரதி 10 பவுனில் தங்க காப்பு வாங்கி பரிசளித்துள்ளார். அதனை அவர் விற்று அவர் செலவு செய்துள்ளார். இதையடுத்து மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்யும்படி பாரதி வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் நைட்ஷோ சினிமாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். பாரதி எப்போதும் இரண்டு சிகரெட்டை ஒரே நேரத்தில் புகைப்பாராம். அதன்படியே அவர் சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்தபோது மீண்டும் விவாகரத்து பேச்சு தொடங்கி, தகராறில் உதயசரணின் கையை அவர் கடித்து காயப்படுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த உதயசரண், பாரதியை கடுமையாக தாக்கி தலையணையால் அமுக்கி கொன்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீசார், நேற்று மாலை உதயசரணை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரது மனைவி காவல்நிலையம் வந்து கணவரை பார்த்து கதறி அழுதார்.

* இன்னொருவர் யார்?

பாரதி வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது. அவர் யார்? என்ற விசாரணையில், உதயசரண் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரை வரவழைத்துள்ளார். பாரதி மூச்சுவிட சிரமப்படுவதாக கூறி அழைத்துள்ளார். அவர் ஓடிவந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.