அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!!
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 202-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்கக்கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கே.சி.வீரமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி.வீரமணியின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும், உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்றால் வழக்கை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கில் ஏதேனும் நகர்வுகள் வரட்டும், அதற்கு பின் வேண்டுமானால் முறையீடு செய்யுங்கள் என்று கூறி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கே.சி.வீரமணியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.