Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உட்கட்சி பூசல்களுக்கு இடையே விரைவில் அதிமுக செயற்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி முடிவு

சென்னை: உட்கட்சி பூசல்களுக்கு இடையே விரைவில் அதிமுக செயற்குழு கூட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று விதி இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அதிமுக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சற்று முன்னதாக அடுத்த மாதமே (ஆகஸ்ட்) அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக 85 மாவட்டங்கள் இருக்கின்றன. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக, கடந்த ஜூன் 13ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி வந்தார். கூட்டத்திற்கு வராதவர்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்துக்கொண்டார். இந்த கூட்டம் கடந்த 25ம் தேதியுடன் முடிவடைந்தது.இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இதேபோல், எம்எல்ஏக்கள் அருண்மொழி தேவன், சுகுமார், ராகேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிமுக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கு உடன்படாதவர்களை கட்சியைவிட்டு நீக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். காலியாகும் கட்சி பதவிகளுக்கு உடனடியாக நிர்வாகிகளையும் நியமித்து, அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டத்தையும் கூட்ட எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம். இதையொட்டி, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக முக்கிய நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.