பல பெண்களுடன் தொடர்பு: விவாகரத்து கேட்ட மனைவியை டிரைவர் மூலம் ஸ்கெட்ச் போட்டு கொன்ற அதிமுக நிர்வாகி கைது
கோவை: பல பெண்களுடன் தொடர்பு வைத்து, கள்ளக்காதலியுடன் தனி குடும்பம் நடத்தி வந்த அதிமுக நிர்வாகியிடம் அவரது மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி, செங்கல் சூளையை எழுதி தருவதாக டிரைவருக்கு ஆசையை காட்டி, அவர் மூலம் மனைவியை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே உள்ள தாளியூரை சேர்ந்தவர் கவி சரவணக்குமார் (எ) கவி சரவணன் (51). அதிமுக பிரமுகரான இவர், பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, கோவை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). இவர்களுக்கு சஞ்சய் (19) என்ற மகனும், நேத்ரா (15) என்ற மகளும் உள்ளனர். சஞ்சய், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேத்ரா 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மகேஸ்வரியை பிரிந்த கவி சரவணக்குமார், கோவை வடவள்ளி பகுதியில் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியை, கார் டிரைவர் சுரேஷ் (49) என்பவர் குத்திக்கொலை செய்து, வடவள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்தார். கொலை நடந்த இடம் தடாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், தடாகம் போலீசார் கார் டிரைவர் சுரேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது சுரேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நான் கவி சரவணக்குமாரிடம் கடந்த 15 வருடங்களாக கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். கவி சரவணக்குமார் 5 வருடங்களாக அவரது மனைவி மகேஸ்வரியை பிரிந்து, தடாகம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தார். இதனால் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த மாதம் 28ம்தேதி காலை சுமார் 9.15 மணிக்கு தாளியூர் வீட்டுக்கு வந்தபோது, கருத்து வேறுபாடுகளை மறந்து உங்கள் கணவர் கவி சரவணக்குமாரை அழைத்து பேசும்படி நான் கூறினேன். அப்போது மகேஸ்வரி ஆவேசமாக என்னை திட்டினார், இதனால் ஆத்திரம் அடைந்து போர்டிகோ டிராயரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தில் குத்திக்கொலை செய்தேன்’ என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், கொலைக்கு இதுவா காரணமா...? என அப்பகுதி மக்கள் பேசி வந்தனர். மேலும், மகேஸ்வரியை, கவி சரவணக்குமாரே கொன்று, பழியை டிரைவர் சுரேஷ் மீது போட்டுள்ளார்... எனவும் மகேஸ்வரியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். கொலை நடந்த வீட்டை சுற்றிலும், வீட்டு வளாகத்திலும் சிசிடிவி கேமரா இருந்துந்துள்ளது. ஆனால், கொலை நடந்த அன்று சிசிடிவி கேமராக்கள் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. மேலும், சுரேசின் மொபைல் போன் கால் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது, மகேஸ்வரியை கொலை செய்வதற்கு முன்பு, சுரேஷ் கவி சரவணக்குமாரிடம் பேசியிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட டிரைவர் சுரேசை, தடாகம் போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது, திடுக்கிடும் வாக்குமூலத்தை போலீசில் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
செங்கல் சூளை நடத்தி வந்த கவி சரவணக்குமார், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருவதாக காரணம் காட்டி, பல பெண்களிடம் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அவ்வாறு பல பெண்களிடம் தகாத உறவில் இருந்தபோது கவி சரவணக்குமார், ஒரு நாள் தனது மனைவி மகேஸ்வரிடம் கையும், களவுமாக மாட்டிக்கொண்டார். கவி சரவணக்குமாரின் கள்ளக்காதல் லீலைகள் தெரிய வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர், இனி அவ்வாறு தவறு செய்ய மாட்டேன் என மனைவியிடம் கெஞ்சி, மன்னிப்பு கோரியுள்ளார். இதன்பிறகும் அவரது கள்ளக்காதல் லீலைகள் தொடர்ந்தது.
வடவள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வீடு எடுத்து ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது, அவரது மனைவி மகேஸ்வரிக்கு தெரிய வர விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் அவர் விவாகாரத்து தர மறுத்துள்ளார். இதனால் கவி சரவணக்குமார் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தன்னிடம் 15 ஆண்டுகளாக டிரைவராக வேலைபார்த்து வந்த சுரேசை பயன்படுத்தியுள்ளார். அவரிடம், தனது மனைவியை கொலை செய்து விடு. இதற்கான வழக்கு செலவை நான் பார்த்துக்கொள்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தனது பெயரில் உள்ள (கவி சேம்பர்) செங்கல் சூளையை உனது பெயருக்கு எழுதி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி, சுரேஷ், இந்த கொலை திட்டத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். கவி சரவணக்குமார் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் படி, மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இதையடுத்து, வடவள்ளியில் உள்ள கவி சரவணக்குமார் வீட்டிற்கு சுரேஷ் சென்றார். பின்னர், இருவரின் திட்டத்தின் படி வடவள்ளி காவல் நிலையத்திற்கு சுரேஷை அழைத்து சென்று கவி சரவணக் குமார் ஒப்படைத்தார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார், கவி சரவணக்குமாரை இரண்டாவது கொலையாளியாக சேர்த்து, கைது செய்துள்ளனர். டிரைவர் சுரேசை தொடர்ந்து இவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்துவிட்டு போலீஸ் முன் நாடகம்
மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு கவி சரவணக்குமார் வீட்டிற்கு டிரைவர் சுரேஷ் சென்று உள்ளார். உடனே, கவி சரணக்குமாரே, சுரேஷை அழைத்து சென்று போலீசில் சரணடைய வைத்துவிட்டு, கொலை நடந்த வீட்டிற்கு சென்று உள்ளார்.
அப்போது அங்கிருந்த மகன், மகளிடம் ஒன்றும் தெரியாதது போல் பேசி கண்ணீர் சிந்தியபடி, எனது மனைவியை கொலை செய்த சுரேசை சும்மா விடக்கூடாது... என கூச்சல் போட்டு கத்தியுள்ளார். போலீசாரிடமும் கொலை எப்படி நடந்தது என தெரியவில்லை என கூறி உள்ளார். கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்து சிசிடிவி கேமராக்கள் ஆப் செய்து தீர்த்துக்கட்டிவிட்டிய கவி சரணவக்குமார், மனைவி மீது பாசம் வைத்திருப்பது போல் ஆடிய நாடகத்தை பார்த்து ஊர் மக்கள் டிரைவர் சுரேஷ்தான் கொலையாளி என நம்பிவிட்டனர். போலீசாரின் கிடுக்கிபிடியால் கள்ளக்காதல் மோகத்தால் மனைவியை கவி சரவணக்குமாரே கொலை செய்தது தெரியவந்து, தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.