Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:முதல்வர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு, சிறப்பு அதிகாரி என்கிற அரசு பணி வழங்கினார். இதற்கான எதிர்ப்பை தொடர்ந்து இந்த அரசாணை ரத்தானது. விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர், முதல்வரின் ஆலோசகர்களாக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் மே 22ல் வெளிவந்தும், பகிரங்கமாக முறைப்படி அரசாணை வெளியிடப்படவில்லை. விஜய்யின் சமூக வலைத்தள அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், ராம்குமாருக்கும் முதல்வரின் நேர்முக உதவியாளர் பணி வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கும் முறையான அரசாணை வெளியானதாக தெரியவில்லை.

அதிகாரப்பூர்வமாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் விஜய்யின் புதிய அலுவலகத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகியோருக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த நவீன் மூஸா, முதல்வருடன் கூடவே செல்கிறார். இவருக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளதென பாதுகாப்பு போலீசாருக்கும் தெரியவில்லை.‌ விஜய்யின் சமூக வலைத்தள ரசிகர் மன்ற தலைவரான குருவிற்கு, தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பக தலைவராகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள சமூக ஊடகப்பிரிவு சிறப்பு அதிகாரியாக தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் அரசாணைகள் இல்லை.

முறையான சட்டரீதியான நியமனம் என்றால் ரகசியமாக வைக்கும் அவசியம் முதல்வருக்கு ஏன் வந்தது? விஜய்யின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணிகள் குறித்து நீதியரசர்கள் கேள்வி எழுப்பினார்களே? அதேபோல விஜய்யின் நட்பு வட்டாரங்களுக்கு வழங்கிய பணிகளுக்கும் நீதிமன்றத்தில் கேள்வி வந்து விடுமோ என்கின்ற பயம் காரணமாக இருக்கலாம். விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும் என்றால், வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அல்வா தான் கிடைக்குமா?

இவ்வாறு பேசியுள்ளார்.

* காலை உணவு திட்டத்துக்கு ஆதிதிராவிடர் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வது சமூக நீதியா?

உதயகுமார் மேலும் பேசுகையில், ‘‘காலை உணவு திட்டத்திற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதியை எடுத்து பயன்படுத்தி உள்ளீர்கள். இதுகுறித்து கேட்டால் காலை உணவு திட்டத்தில் எல்லோரும் உணவு அருந்துகிறார்கள். அதில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களும் உணவு அருந்துகிறார்கள் என கூறுகிறார்கள். 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தியுள்ள திட்டத்திற்கு தனியாக நிதி ஒதுக்காமல், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதியிலிருந்து ஒதுக்கி இருப்பது சமூக நீதிக்கே சவாலாக இருக்கிறது. இன்றைக்கு அரசின் நிர்வாகம், பணி நியமனங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு மர்ம கதை போல, ஒரு மாயாஜால விட்டலாச்சாரியார் கதை போலத்தான் சென்று கொண்டிருக்கிறது’’ என்றார்.