Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக - பாஜ கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை டெல்லி தான் முடிவு செய்யும்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி: அமித்ஷாவே சொல்லிவிட்ட பிறகு இனி யாரும் பேச வேண்டாம் எனவும் உத்தரவு

* தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கிறது. அந்தந்த தொகுதிக்கு செல்லும்போது அங்குள்ள பிரச்னைகளை சொல்லி அதிமுக பிரசாரம் செய்யும்.

* சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள எங்களுடன் (அதிமுக) கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுக்கெல்லாம் அழைப்பு கொடுத்திருக்கிறோம்.

* ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைவோம்.

* தேமுதிக, ஜனவரி மாதம் தான் அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். (அதனால் தேமுதிக கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. பாமகவும் கூட்டணி குறித்து உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. அதனால் பாமகவும் பிரசாரத்தில் கலந்துகொள்ளாது)

சென்னை: அதிமுக, பாஜ கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை டெல்லிதான் முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீரென்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவே கூறிவிட்ட பிறகு இனி யாரும் பேச வேண்டாம் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளதும் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான பிரசார லோகோ மற்றும் பாடலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அப்போது, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, ‘‘சென்னைக்கு அமித்ஷா வந்தபோது ஐடிசி ஓட்டலில் தெளிவாக பேசி உள்ளார். அதிமுக - பாஜ கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறினார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். நான்தான் (எடப்பாடி) முதலமைச்சர் வேட்பாளர். கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். இதுபற்றிய செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வந்தது என்றார்.

அப்போது நிருபர்கள், ‘அதிமுகவில் இருந்து ஒரு முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது முதல்வர் வேட்பாளரை தெளிவுபடுத்தாத நிலை உள்ளது’ என்று கேட்டபோது, அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘‘இதில் டெல்லி எடுக்கிற முடிவுதான். உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறியபிறகு, அதற்கு அடுத்தாற்போல் யார் பேசினாலும், அது சரியில்ல என்பதான் என்னுடைய கருத்து. இப்போது, அதைப்பற்றியே கேள்வி கேட்டு, அதற்கு ஒரு வடிவத்தை கொடுப்பது சரியா என்றார். எடப்பாடி பழனிசாமியின் பேட்டியை பார்த்ததும் அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

அமித்ஷா, சென்னையில் எடப்பாடியை வைத்துக் கொண்டு பேசும்போது, அதிமுக, பாஜ கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என்றார். அதன்பின்னர் தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அமைச்சரவை பற்றி அமித்ஷா கூறவில்லை.அதிமுக, பாஜ இணைந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறினார் என்று பதில் அளித்தார். அதற்கு பிறகு 2 முறை தொலைக்காட்சி பேட்டிகளில், தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்பதை அமித்ஷா வலியுறுத்தினார்.

அதோடு, சென்னையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தவர், டெல்லி பேட்டிகளில் அதிமுக சார்பில் ஒருவர் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என்றார். ஏன் அவர், எடப்பாடி பழனிசாமியின் பெயரை அறிவிக்காமல், அதிமுகவில் இருந்து ஒருவர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார் என்பதில்தான் அதிமுகவினருக்கும், பாஜவினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால்தான் தமிழக பாஜவினர் கூட்டணி அமைச்சரவை குறித்து அமித்ஷா முடிவு செய்வார் என்கின்றனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசுவதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுடன் நிர்மலா சீதாராமனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பின்னர்தான் எடப்பாடி பழனிசாமி பணிந்து, அமித்ஷாவை சந்தித்தார். இதனால் பாஜவின் மனதில் ரகசிய திட்டம் ஏதாவது இருக்கலாம் என்பதைத்தான் அவர்களது நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

அதேநேரத்தில் அது தெரிந்துதான், முதல்வர் வேட்பாளரை அமித்ஷா முடிவு செய்தார் என்று, அந்தர் பல்டி அடித்து எடப்பாடி கூறியிருக்கலாம் என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளரைக் கூட அமித்ஷாதான் முடிவு செய்வார் என்று அதிமுகவின் பொதுச் செயலாளரே கூறியிருப்பது தொண்டர்களை அதிர்ச்சியும், ஆத்திரமடையவும் வைத்துள்ளது.

ஏற்கனேவே எதிர்க்கட்சிகள் பாஜவின் அடிமை கட்சிதான் அதிமுக என்று விமர்சித்து வரும்நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அமைந்திருப்பதாகவும் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியுடன் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அதிமுக, பாஜவினர் மத்தியில் கடும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில் தெரிவித்ததாவது: எதிர்க்கட்சி தலைவர் இப்போதுதான் மக்களை சந்திக்கிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். நான் எப்பொழுதும் மக்களோடு தான் இருக்கிறேன். இந்த எழுச்சி பயணத்தை, தேர்தல் பிரசாரம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். இந்த பயணத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதிமுக, 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை நாங்கள் கொடுத்திருக்கிறோம். வருகிற 7ம் தேதி (நாளை) என்னுடைய தேர்தல் பயணத்ைத கோவை தொகுதி மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கிறது. அந்தந்த தொகுதிக்கு செல்லும்போது அங்குள்ள பிரச்னைகளை எடுத்துச் சொல்லி அதிமுக பிரசாரம் செய்யும். இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள எங்களுடன் (அதிமுக) கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுக்கெல்லாம் அழைப்பு கொடுத்திருக்கிறோம். தேமுதிக, ஜனவரி மாதம் தான் அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். (அதனால் தேமுதிக கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அதேபோன்று பாமகவும் இன்னும் கூட்டணி குறித்து உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. அதனால் பாமகவும் பிரசாரத்தில் கலந்து கொள்ளாது) மேலும், ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.

அவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைவோம். பாஜ, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என தவெக தலைவர் விஜய் பேசியது அவருடைய கருத்து. எல்லா கட்சிகளும் தங்கள் கட்சிகளை வளர்ப்பது என்பதும் மற்ற கட்சிகளை விமர்சிப்பதும் ஒவ்வொரு கட்சிகளின் இயல்புதான். எங்கள் கூட்டணி மெகா கூட்டணியாக அமையும். எனக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது உண்மைதான். இவ்வாறு அவர் கூறினார்.எடப்பாடி பழனிசாமி பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.