Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆஹா நன்னாரி வேர்!

நன்னாரி வேர் இயற்கையான மணமும் குளிர்ச்சி தரும் தன்மையும் காரணமாக, வெப்பமான காலங்களில் உடலை சமநிலைப்படுத்த உதவும் ஒரு சிறந்த நாட்டு மருந்தாக இது அறியப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் திறன் நன்னாரி வேரில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி தயாரிக்கும் நன்னாரி சர்பத், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி தருவதோடு, நீர்ச்சத்து குறைபாட்டையும் சமாளிக்க உதவுகிறது.

நன்னாரி வேர் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது துணைபுரிகிறது. சிலர் தொடர்ந்து பயன்படுத்தும்போது முகப்பருக்கள் குறைவதாகவும், சருமம் தெளிவாக மாறுவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர். உடலின் சூட்டை சமப்படுத்துவதால், சிறுநீரக மற்றும் சிறுநீர்ப் பாதை தொடர்பான பிரச்னைகளையும் குறைக்க உதவுகிறது.

இதன் வேர் செரிமானத்திற்கு உதவக்கூடியதாகவும் கருதப்படுகிறது. உணவுக்குப் பிறகு ஏற்படும் எரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை சரி செய்யும். மேலும், இதன் இயற்கையான இனிப்பு மணமும், சுவையும் மனஅழுத்தத்தை குறைத்து சாந்தமான உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால் சிலர் இதனை இயற்கையான மன அமைதி தரும் பானமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் நீரில் கலந்து குடிப்பது வழக்கம். ஒருசிலர் நல்ல உறக்கம் பெற தலையணைக்குக் கீழ் நன்னாரி வேர் பயன்படுத்துவதும் உண்டு. சோர்வு, சக்தி இழப்பு, என பல பிரச்னைகளுக்கு நன்னாரி பலன் தரும்.