ஆடி மாதம் வந்துவிட்டாலே , மாரியம்மன் மட்டுமல்ல, உடன் வேப்பிலையும் சேர்ந்து கண் முன் நிற்கும். கடவுள் என்பவர் எப்படி நமது பிரச்னையை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோமோ, அதே போன்று கடவுளாக வணங்கும் வேப்ப மரமும் நமது உடலில் உள்ள பல பிரச்னைகளை குணப்படுத்தும். சொல்லப்போனால், வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். பொதுவாகவே ஆடி மாதம் துவங்கி வெயில், மழை என மாறி மாறி காலநிலை மாறும், இவ்வேளையில் நோயை விரட்டும் ஒரு மூலிகை நம் வாழ்வில் இருக்க வேண்டும் என்பதாலேயே வேப்பிலையை கடவுள் பெயரைச் சொல்லியாவது நம் வாழ்வில் இணைத்தனர் நம் முன்னோர்கள்.
வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர்வேத மருத்துவத்தை மேற்கொண்டால், சரிசெய்ய முடியாத நோயையும் சரிசெய்யலாம் என்று சொல்வதற்கு காரணம் வேப்பிலைதான்.
வேப்பிலையின் நன்மைகள்
*வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊறவைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளைப் புள்ளிகள் நீங்கி விடும்.
*ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து தினமும் இரவில் படுக்கும்போது துடைத்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். வேப்பிலை நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
*வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு அதனை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
*வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து அதில் சிறிது தேன் கலந்து தலைக்கு தடவி ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி கூந்தல் பட்டுப் போன்று மின்னும். ஹேர் கண்டிஷனர் போன்ற பயன் கொடுக்கும்.
* வேப்பிலையில் வலியைப் போக்கும், காய்ச்சலை சரிசெய்யும், காயங்களை குணப்படுத்தும் ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளது. எனவே இதனை காயங்கள், காதுவலி, தலை வலி போன்றவற்றிற்கு பயன்படுத்தினால் குணமாகிவிடும்.
*வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.
- பொ. பாலாஜிகணேஷ்.



