Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய பணிகளுக்கு வரமாகும்: சென்சார் முறையில் நவீன தானியங்கி நீர்ப்பாசன திட்டம்; சேலம் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழ்வது வேளாண்மை. நாடு முழுவதும் உள்ள 50 சதவீத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, விவசாயமே வேலைவாய்ப்பு அளிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதம் வரை, தனது பங்களிப்பை வேளாண்மை வழங்கி வருகிறது. இதன்காரணமாக, உலக அளவில் பால், பருப்பு வகைகள் மற்றும் மசாலா பொருட்களின் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும், அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி மற்றும் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இத்தனை சாதனைகள் இருந்தாலும், விதைத்த பயிரை முறையாக சாகுபடி செய்து, சிதறாமல் அறுவடையை நடத்தி, உற்பத்தி பொருளை உரிய விலைக்கு விற்றால் தான், விவசாயிகளின் பணி முழுமை பெறும். ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அது கைகூடுவது இல்லை. பருவமழை ஏமாற்றம், இயற்கை இடர்பாடுகள், காலம் தவறி பெய்யும் மழை உள்ளிட்டவை விவசாயிகளை நிலைகுலைய செய்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் மீது நம்பிக்கை வைத்து, விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.

அரிசி, கரும்பு, பருத்தி, தேயிலை மற்றும் காபி போன்றவை முக்கியப் பயிர்களாக உள்ளன. காலநிலை மாற்றம், சிறிய நிலப்பரப்புகள், நீர்ப்பாசனப் பற்றாக்குறை போன்றவை விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, சீரான பாசனத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது. இதனை போக்க சொட்டுநீர் பாசன முறையை அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவற்றிலும் தொடர் கண்காணிப்பு, நீண்டநேர காத்திருப்பு என்பது விவசாயிகளுக்கு முழுமையான பலனை தரவில்லை.

இதனை களையும் வகையில், சேலத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் `சென்சார் முறையில் நவீன தானியங்கி நீர்ப்பாசன திட்டம்’ என்ற சிறப்பான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 11ம் வகுப்பு கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் பயின்று வரும் மாணவிகள் ஸ்ரீரஞ்சனி, பரிநயா, வேதஸ்யா மற்றும் தனுஜா ஆகியோர் இந்த சிறப்பான சிஸ்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறியதாவது: விவசாய பணிகளுக்கு உதவிகரமாக ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற யோசனையின் போது தான், இந்த `சென்சார் முறையில் நவீன தானியங்கி நீர்ப்பாசன திட்டம்’ தோன்றியது. இதுகுறித்து தெரிவித்த போது, பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா எங்களை ஊக்கப்படுத்தினார். ெதாடர்ந்து முதுகலை ஆசிரியை சங்கீதா வழிகாட்டுதலில், எங்களது யோசனையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தோம். இதற்கு அறிவியல் ஆசிரியர் பூவரசன் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் உதயநிதி, ஜெயேந்திரன் ஆகியோர் உதவிகரமாக இருந்தனர்.

பொதுவாக வயல்வெளியில் நீர்ப்பாசனம் செய்ய, எந்நேரமும் ஒருவர் உடன் இருந்து கண்காணிப்பது அவசியம். அத்துடன் மண்ணுக்கு தேவையான நேரத்தில் போதுமான அளவு நீரை வழங்குவதும் முக்கியம். இவற்றை முறையாக செய்யாவிட்டால், பயிர் சாகுபடி நாம் எதிர்பார்த்தபடி இருக்காது. இதனை கருத்தில் கொண்டு தான் இந்த `சென்சார் முறையில் நவீன தானியங்கி நீர்ப்பாசன திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நமது தோட்டத்தில் நீர் பாய்ச்சும் போது இறுதியாக தண்ணீர் சென்று சேரும் இடத்தில், மண் ஈரப்பதத்தை சோதிக்கும் சென்சார் பொருத்தப்படும்.

மண் வறட்சியடைந்து, அதன் வெப்பநிலை அதிகமாகும் போது, இது குறித்து நாம் ஏற்கனவே பொருத்தியுள்ள அமைப்பிற்கு தகவல் அளிக்கும். அதனை தானாக உணர்ந்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மோட்டார் பைப்லைன், போதுமான அளவிற்கு தண்ணீரை வயல்களுக்கு பாய்ச்சும். மண்ணின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவை தொட்டவுடன், மீண்டும் சென்சார் தகவல் அனுப்பி, தாமாகவே மோட்டரை அணைத்து விடும். மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிர்களின் தேவையை உணர்ந்து, மனித தலையீடு இன்றி தானாகவே நீர் பாய்ச்சும் தொழில்நுட்பம் தான் இதன் சிறப்பு அம்சமாகும்.

முற்றிலும் சென்சார்களை பயன்படுத்துவதால், நீரைச் சேமித்து, பயிர் மகசூலை அதிகரிக்க உதவுகிறது. எதிர்காலத்தில் செல்போன் ஆப் மூலமும் இதை இயக்கும் வகையில், வடிவமைக்க உள்ளோம். இதனால் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் நீர்ப்பாசனம் நடைபெறும். தேவைக்கு ஏற்ப மட்டும் நீர் பாய்ச்சப்படுவதால், தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. முறையற்ற மின் விநியோக நேரங்களில், தானாகவே இயங்கும் வகையில் அமைக்கலாம். சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகளுடன் இதை இணைத்து பயன்படுத்தலாம். தற்போது வேளாண்மையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறைக்கு, சிறந்த தீர்வாக இந்த முறை அமையும். இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர். ₹5000 பரிசு இந்த கண்டுபிடிப்பு ₹5 ஆயிரம் பரிசு பெறுகிறது.

* இப்பகுதியில் இடம்பெறும் கண்டுபிடிப்புகளுக்கு வாரம் ₹5 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இதுபோல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல் இருந்தால், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மாணவர் கண்டுபிடிப்பு சண்டே ஸ்பெஷல்: தினகரன், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004. email: studentinvention @dinakaran.com

* தானியங்கி அமைப்பு செயல்படும் விதம்

சேலம் அரசுப்பள்ளி மாணவிகள் கண்டுபிடித்துள்ள இந்த சென்சார் முறையிலான நவீன தானியங்கி நீர்ப்பாசன திட்டத்தை உருவாக்குவதும், செயல்படுத்துவதும் மிக எளிமையான முறையாகும். இதற்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் திட்டங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் ஆர்டினோ போர்டு, மண்ணின் ஈரப்பதத்தை உணர்த்தும் சென்சார் போர்டு, வெப்பநிலை அளவீடு, எல்இடி டிஸ்பிளே, மின்சாரம், பேட்டரி அல்லது சோலார் சிஸ்டம், வாட்டர் பம்பிங் சிஸ்டம் போன்ற எளிய பொருட்கள் இருந்தாலே போதுமானது. மண்ணுடன் வைக்கப்பட்டுள்ள சென்சார், அதன் ஈரப்பதத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.

ஈரப்பதம் குறைந்து, வறண்ட நிலை ஏற்பட்டால், இதுகுறித்து எல்இடி டிஸ்பிளே மூலம் தகவல் தெரிவிக்கும். பின்னர், தானியங்கி முறையில் வாட்டர் பம்பிங் சிஸ்டம் மூலம் சம்பந்தப்பட்ட வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். இதில், நாம் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து வைத்துவிட்டால், தானாகவே தண்ணீர் நின்று விடும். அதே சமயம், மண்ணின் ஈரப்பதம் குறைந்தாலும், சென்சார் மூலம் தகவல் கிடைத்து நிறுத்தப்படும். இதனால் விவசாயிகளின் நேரமும், தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படும்.