ஆகம குழுவினால் கண்டறியப்பட்ட கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அரசினால் 06.10.2025 அன்று ஐந்து நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. ஆகமக் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்தில் 25.08.2026 அன்று வெளியிடப்பட்டு, இது குறித்த விவரங்களில் பொதுமக்கள் விடுதல் ஏதேனும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், 25.09.2026-க்குள் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு 10.10.2026-க்குள் கருத்துக்கள் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபேராணை மனு எண்.30397/2026 –இல் 23.10.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆகமக் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக 05.11.2026 முதல் 25.11.2026 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள்/ஆட்சேபனைகளை தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும் 25.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் தெரிவித்திட ஆகமக் குழுவினால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


