ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ‘‘ஈரானின் இந்த தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல்” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்கள் உள்பட 80 இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலடியாக, ஈரானும் குவைத், பக்ரைனில் உள்ள 85 அமெரிக்க ராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியின் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. ‘’ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அவர்களுடன் இனி எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் மோசமானவர்கள் மற்றும் குணப்படுத்த முடியாதவர்கள்” என்று டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார். இந்த திடீர் மோதலால் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
மேலும், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. போர் பாதிப்பு அதிர்வுகளை, இந்தியா உள்நாட்டில் மீண்டும் உணர தொடங்கியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதியளவு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் பெரும் பகுதி, ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றன. பாரசீக வளைகுடாவின் இந்த குறுகிய பாதை தற்போது மூடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து, வேலை செய்கிறார்கள். அவர்கள் அதிகளவில் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு, இந்தியாவின் வெளிநாட்டு கணக்குகளின் பெரும் பகுதியை ஈடுகட்டவும் உதவுகிறது. இன்னும் விரிவாக கூற வேண்டுமெனில், மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார தொடர்புகள் மிகவும் ஆழமானவை. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 55 சதவீதத்தை வளைகுடா நாடுகள் வழங்குகின்றன.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பண வரவில் வளைகுடா நாடுகள் 38 சதவீதம் பங்கு வகிக்கிறது. வளைகுடாவில் மீண்டும் விரிவடையும் போர், இந்தியாவின் பல துறைகளை பாதிக்கிறது. எரிசக்தி விநியோகம், புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணம், அமெரிக்கா, ஈரான் மற்றும் அரபு வளைகுடா நாடுகளுக்கு இடையே இந்தியா மேற்கொள்ளும் நுட்பமான ராஜ்ஜீய சமநிலை என பலவற்றை அது பாதிக்கிறது.
இந்தியா கடந்த ஆண்டு, சுமார் 25 மில்லியன் டன் எல்.என்.ஜியை இறக்குமதி செய்துள்ளது. இதில், சுமார் 14 மில்லியன் டன் ஹார்முஸ் வழியாக வந்தது. இது, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுடன் சேர்ந்து உலகில் மிகப்பெரிய அளவில் எல்என்ஜி வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுகிறது.
உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடம் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், சமையலறைகளில் உள்ள எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களுக்கான எல்என்ஜி விநியோகம் மிக விரைவாக தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஈரானை சுற்றியுள்ள பதற்றங்கள் தணிந்தால் மட்டுமே இந்தியாவால் நம்பிக்கையுடன் நடைபோட முடியும்.


