Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதிதிராவிடர் நல பள்ளிகளை உண்டு உறைவிட பள்ளிகளாக மாற்ற 6 வாரத்தில் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை, உண்டு உறைவிட பள்ளிகளாக மாற்றக்கோரிய வழக்கில் 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியை சேர்ந்த செல்வக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தற்போது வரை 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப்பள்ளிகள், 108 உயர்நிலைப்பள்ளிகள், 98 மேல்நிலை பள்ளிகள் என 1,138 பள்ளிகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இதனுடன் 1,131 விடுதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் 2024-25ம் கல்வியாண்டில் மொத்த மாணவர் சேர்க்கை 76,300 ஆகும். இது முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைவாகும். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் போதுமான பள்ளிகளும் விடுதிகளும் உள்ளதால், அவற்றை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் மேம்பட்ட உண்டு, உறைவிட பள்ளிகளாக மாற்றினால், மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

போட்டித் தேர்வுகளுக்கான தரமான பயிற்சியும் கிடைக்கும். கல்வித்தரம் உயரும். எனவே, அனைத்து ஆதிதிராவிட நல பள்ளிகளையும், உண்டு உறைவிட பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், மனுதாரர் குறிப்பிடும் விவகாரத்தில் அரசு தான் கொள்கை ரீதியான முடிவு எடுக்க முடியும்.

எனவே, மனுதாரர் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரை வரும் 19ம் தேதி அவரது அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு நேரில் சந்தித்து தனது கோரிக்கையை வைக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை நேரில் பெற்றுக் கொண்ட இயக்குனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று ஆறு வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தனர்.