Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

புழல் சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி அடுத்தடுத்து 6 வழக்குகளில் கைதாகிறார்: 3 நாள் காவலில் விசாரிக்க போலீஸ் முடிவு

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை, தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள அடுத்தடுத்த 6 வழக்குகளில் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு சமுதாய பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது..இதையடுத்து அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கடந்த 10 நாளாக தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான மகளிர் காவலர்கள் கொண்ட 2 தனிப்படையினர் கடந்த 16ம் தேதி ஐதராபாத்தில் கைது ெசய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 29ம் தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கஸ்தூரி மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

மேலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடிகை கஸ்தூரி மீது ஏற்கனவே இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், கும்பகோணம் மற்றும் கோவை என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 இடங்களில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதுக்கு முன்னதாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அப்போதே நடிகை கஸ்தூரியை கைது செய்ய மதுரை மாவட்ட மற்றும் கோவை போலீசாரும் தனித்தனியாக தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை பெருநகர காவல்துறையின் தனிப்படை போலீசார் நடிகை கஸ்தூரியை கைது செய்துவிட்டனர். எனவே திருநகர் போலீசார் மற்றும் கோவை போலீசார் புழல் சிறையில் உள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்வதற்கான வாரன்ட்டுடன் சென்னைக்கு செல்ல தயாராக இருப்பதாக போலீஸ் தரப்பில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட கஸ்தூரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏனென்றால், நடிகை கஸ்தூரியை சிலர் திட்டமிட்டு பின்னால் இருந்து இரு சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேச தூண்டியதாக கூறப்படுகிறது. அதேநேரம் நடிகை கஸ்தூரி கைதுக்கு முன்பு அவர் பேசிய வீடியோ, கைது செய்து சிறையில் அடைத்த பிறகு திட்டமிட்டு வெளிநபர்கள் மூலம் கஸ்தூரி பேசிய வீடியோ வெளியானது. எனவே நடிகை கஸ்தூரியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை திட்டமிட்டு ஏற்படுத்த ஏன் அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்த ஏதுவாக, 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.