மும்பை: கொடூரமான ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் மூட்டு தேய்மான நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தீவிர உடற்பயிற்சியின் மூலம் அதில் இருந்து மீண்டு வந்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை பிபாஷா பாசு (47), ‘ரேஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே ‘ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்’ என்ற கொடூரமான மூட்டு தேய்மான நோயால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பிபாஷா பாசு, ‘நான் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன்.
எனது உடலை எப்படி பராமரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆயுள் முழுவதும் உட்கார்ந்தே இருக்க வேண்டும் என்றும், நடனம் ஆடவோ அல்லது சண்டை காட்சிகளில் நடிக்கவோ முடியாது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அதேநேரம் தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினேன். அதுவே எனது வாழ்க்கையில் நடந்த சிறந்த விஷயம் ஆகும்.
இந்த நோய் என்னை மேலும் வலிமையாக்கியது’ என்று கூறினார். நேர்மறை எண்ணங்களுடனும் கடின உடற்பயிற்சியாலும் நோயை வென்று காட்டிய நடிகை பிபாஷா பாசுவின் இந்த துணிச்சலான செயல், லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதாக ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



