27 ஆண்டு கால சினிமா வாழ்க்கை; கணவரை பிரிந்து குகையில் தஞ்சம் புகுந்த நடிகை: பிச்சை எடுத்து உண்ணும் பரிதாபம்
மும்பை: பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கணவர் மற்றும் சொகுசு வாழ்க்கையை துறந்து இமயமலையில் சந்நியாசியாக வாழ்ந்து வருகிறார். இந்தி தொலைக்காட்சி உலகில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நூபுர் அலங்கார். ‘சக்திமான்’, ‘தியா அவுர் பாதி ஹம்’ போன்ற பல வெற்றித் தொடர்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பிஎம்சி வங்கி மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்தார். அதனைத் தொடர்ந்து தனது தாய் மற்றும் சகோதரியையும் அடுத்தடுத்து இழந்ததால், உலக வாழ்க்கையின் மீது பற்றை இழந்தார்.
இதையடுத்து, தனது கணவரின் விருப்பமில்லாத சம்மதத்துடன், தனது நடிப்பு வாழ்க்கை மற்றும் ஆடம்பர வாழ்க்கையை முழுவதுமாகத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார். தற்போது ‘பீதாம்பரா மா’ என்ற ஆன்மீகப் பெயருடன் இமயமலைப் பகுதிகளில் வசித்து வருகிறார். அங்கு மிகக் குறைந்த உடைகளுடன், எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
பிச்சை எடுத்து கிடைக்கும் உணவை உண்டு, குகைகளிலும், தொலைதூர கிராம பகுதிகளிலும் வசித்து வருகிறார். அவ்வாறு வாழும்போது, கடுமையான பனி மற்றும் எலிக்கடியால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘உலக வாழ்க்கையின் அழுத்தங்கள், செலவினங்கள் போன்ற கவலைகள் இல்லாமல் தற்போது மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நடிகை, இன்று அனைத்தையும் துறந்து சந்நியாசியாக வாழ்வது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.