சவுதியில் பெட்ஷீட் வழங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகை அலறல்: திடீரென மக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
ரியாத்: சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் தொழுகை விரிப்புகளை வழங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பயத்தில் அலறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகையாகவும், சர்ச்சைகளுக்கு பெயர் போனவருமான ராக்கி சாவந்த் (47), கடந்த சில காலங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவி, தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட அவர், அங்கு நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த யாத்ரீகர்களுக்கு புனித தொழுகை விரிப்புகளை இலவசமாக வழங்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார். அப்போது தொழுகை விரிப்புகளை பெறுவதற்காக ஏராளமான மக்கள் திடீரென ராக்கி சாவந்தை ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு சூழ்ந்தனர்.
இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதில் நிலைதடுமாறி பயந்துபோன ராக்கி சாவந்த், ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்டபடி கூட்டத்தை அமைதிப்படுத்த கடுமையாக முயற்சி செய்தார். இருப்பினும் கூட்டம் அவரை விடாமல் துரத்திச் சென்று, அருகில் இருந்த கடைக்குள்ளும் புகுந்து எஞ்சிய விரிப்புகளை பிடுங்கிச் சென்றது. இந்த தள்ளுமுள்ளுவின் போது சில நபர்கள் அவரது ஹிஜாபை பிடித்து இழுத்ததால் அவர் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்துக்கும் ஆளானார். இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



