நடிகை பலாத்கார வழக்கு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கவுரவம் உண்டு: இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து
கடந்த 2007ல் ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ஓட்டலுக்கு வரவழைத்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பாலச்சந்திர மேனன் மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.கடந்த மாதம் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலச்சந்திர மேனனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, 17 வருடங்களுக்கு முன்பு சம்பவம் நடந்ததாக கூறி புகார் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மீது புகார் கொடுக்கப் போவதாக நடிகையின் வக்கீல் போனில் மிரட்டியதாகவும் பாலச்சந்திர மேனன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கண்ணியமும், கவுரவமும் உண்டு என்று கூறி பாலச்சந்திர மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.