Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு விவகாரம்; பெண் நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு: கேரளம் ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்பு

கொச்சி: பிரபல நடிகை தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை பெண் நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தீவிர விசாரணைக்கு வந்துள்ளது. கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு காரில் சென்ற பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்ற பெண் நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை விதித்ததோடு, சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப்பை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நடிகைக்காக ஆஜரான வழக்கறிஞர் டி.பி.மினி, பெண் நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த ஜனவரி 12ம் தேதி நடந்த விசாரணையின்போது, ‘நீதிமன்றத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வந்து அரை மணி நேரம் தூங்கினார்’ என்று நீதிபதி பகிரங்கமாக தன்னை அவமதித்ததாக வழக்கறிஞர் மினி குற்றம்சாட்டியுள்ளார்.

தான் 200 நாட்கள் ஆஜராகி சாட்சிகளை தீவிரமாக விசாரித்த நிலையில், நீதிபதியின் இந்த உண்மைக்கு புறம்பான பேச்சால் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு கடும் பாதிப்பு உண்டானதாக அவர் வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பெண் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அட்வகேட் ஜெனரல் அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட இந்த புதிய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன், வழக்கை விரிவான பரிசீலனைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டார்.