நடிகரின் கட்சியில் பதவி கிடைக்கும் என பலரிடம் பணத்தை வாங்கி பதுக்கிய சகோதர நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘நடிகர் கட்சியில் என்ன பஞ்சாயத்தாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நடிகரின் கட்சியில் பதவிக்காக பணத்தை கொடுத்துவிட்டு பலரும் தவியாய் தவித்து வருவதுதான் இப்போது ஹாட் டாபிக்காம்.. நடிகரின் மக்கள் இயக்கத்தில் இயங்கிய பலரும் கட்சி ஆரம்பித்தவுடன் தங்களுக்கு கட்சியில் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் மாவட்ட நிர்வாகிகளான சகோதரர்களிடம் பல லட்சங்களை கொடுத்தாங்களாம்.. ‘ஆகா பதவிக்காக பணம் வருகிறதே...’ என்ற கணக்கில் அந்த இருவரும் பலருக்கும் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வசூலித்துள்ளனர்.
ஆனால், நடிகரின் கட்சியில் பல்வேறு பதவிகளுக்கும் நியமனம் நடந்த நிலையில் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் இன்னும் பதவி வரவில்லையாம்.. இதனால், பணத்தையாவது திருப்பி கொடுங்க என கேட்க, ‘கட்சி ெபாறுப்புகளில் இன்னும் பலர் நியமிக்கப்பட இருக்காங்க.. உங்களுக்கு கண்டிப்பாக பதவி வரும்’ என சாக்குப்போக்கு காரணங்களை இருவரும் கூறி வருகிறார்களாம்.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கட்சி தலைமையிடம் பலரும் புகார் மனு வாசித்துள்ளனர். ஆனால், அங்கும் எதுவும் நடக்கவில்லையாம்.. இதனால், வடை போச்சே என்ற பாணியில் பணம் கொடுத்தவர்கள் புலம்பி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புலியைப் பாத்து சூடுபோட்ட கதை ஏதோ இருக்கிறதா சொன்னியே..’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.‘‘புதுப்புது அரசியல் கூத்துகள் அரங்கேறும் குட்டி பிரான்ஸ் யூனியனில் சமீபத்தில் நடிகர் கட்சியின் மக்கள் சந்திப்பு மாநாடு நடந்ததாம்.. அங்கு பாதுகாப்பு பணியில் தடாலடி காட்டிய வடமாநில பெண் ஐபிஎஸ் வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளத்தில் வைரலாகி பேமஸ் ஆயிட்டார்.. இதனால் காக்கித் துறையில் உள்ள மற்ற அம்மணிகளுக்கும் பேமஸ் ஆசை முளைத்ததாம்.. இதற்காக போக்குவரத்தை கவனிக்கும் பெண் அதிகாரியோ தெருவோர குழந்தைகளை கவனித்து பாடம் படிக்கச் சொன்னாராம்..
இதேபோல் காரை பிராந்திய சீனியர் அம்மணியோ பைக் ரேஸ் இளசுகளை மடக்கி மாஸ்டர் அறிவுரை வழங்கும் வீடியோவை வலைதளத்தில் பரப்பினாராம்.. சிங்கப் பெண்ணுக்கு டெல்லிக்கு இடமாற்றம் கிடைக்க உங்களை மிஸ் பண்ணுவதாக பீல் செய்ய, யூனியன்வாசிகளின் நெஞ்சமெல்லாம் கோலோச்சி விட்டாராம்.. ஆனால் தங்களுக்கோ எந்தவித கைமேல் பலனும் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் சக அம்மணிகள் புலம்புகிறார்களாம்.. இதுபற்றிதான் யூனியன் காக்கிகள் வட்டாரத்தில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெண்டு ஜெயிலில் மட்டும் கோழி வளர்ப்பில் நஷ்டகணக்கு காட்டுறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா
‘‘ ஜெயில் டிபார்ட்மெண்டை எடுத்துக்கிட்டால் 9 மத்திய சிறை உள்பட 125 சிறைகள் இருக்குது.. இங்கு கால் லட்சத்தை தாண்டும் வகையில் கைதிகள் இருக்காங்க.. தவறு செய்து சிறைக்கு வந்திருந்தாலும் அவர்களை திருப்பி அனுப்பும்போது நல்லமனிதனாக மாற்றி அனுப்பும் பணியை சிறைத்துறை செஞ்சிக்கிட்டிருக்கு.. எழுத படிக்க தெரியாதவர்கள் எழுதவும், பட்டதாரிகளாகவும், தொழிற்பயிற்சியும் வழங்கி சிறந்தவர்களாக மாற்றப்படுறாங்க... என்னதான் தப்பு செஞ்சியிருந்தாலும் அவர்களையும் மனிதர்களாக பாவிக்கும் வகையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருது..
வாரத்திற்கு ஞாயிறு, புதன் ஆகிய ரெண்டு நாட்கள் ஒவ்வொருவருக்கும் தலா 150 கிராம் சிக்கன் வழங்கப்படுது.. இதற்காக ஆண்டுக்கு ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டு வந்தது.. அந்த செலவை தவிர்க்கும் வகையில் சிறையில் கைதிகளுக்கு கோழிப்பண்ணையை அமைச்சியிருக்காங்க.. சிறைக் குள்ளாற இருக்கும் காலி இடத்தில் கோழி குஞ்சுகளை கைதிகளை வச்சி வளர்த்திட்டு வாராங்க.. கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி பெறுவதுடன், அவர்கள் மகிழும் வகையில் சம்பளமும் வழங்கப்படுது.. இவ்வாறு 8 ஜெயிலில் கோழி வளர்த்து ரெண்டு நாள் சமையலுக்கு போக பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருது..
எல்லா ஜெயிலிலும் லாபம் கிடைத்தாலும் ரெண்டு ஜெயிலில் மட்டும் நஷ்ட கணக்கை காட்டுறாங்களாம்.. சென்னை புழலில் வாரம் 2 ஆயிரம் கோழி வளர்க்கப்பட்டு வந்தாலும் 2 லட்ச ரூபாய் நஷ்டமுன்னும், கோவை ஜெயிலில் ரூ.60ஆயிரம் நஷ்டமுன்னும் கணக்கு காட்டுறாங்களாம்.. லாபப்பட்டியலில் முக்கிய இடத்தில் திருச்சி, கடலூர் ஜெயில் இருக்குதாம்.. அதெப்படி உங்களுக்கு மட்டும் நஷ்டம் ஏற்படுதுன்னு கேட்டா, கோழி பொத்து பொத்தன்னு செத்து விழுது, ஒரே மழையா பெய்யுது, கடும் வெயிலும், குளிரும் மாறி மாறி அடிக்குதுன்னு புதுக்கதைய விடுறாங்களாம்... இதனால அந்த ரெண்டு ஜெயிலிலும் ஆபீசர்ஸ் பூதக்கண்ணாடி போட்டு பாக்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மக்களை கவரும் வாக்குறுதிகள் இல்லாததால் இலைக்கட்சி தொண்டர்கள் விரக்தியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘சமீபத்தில் அல்வா மாவட்டத்திற்கு இலை கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம் செய்தது. மாஜி அமைச்சர் நத்தம் காரர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது யோசனைகளை தெரிவித்தாங்களாம்..
ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெயமான மாஜியார் கூட்டம் முடிவதற்கு முன்பே பாதியில் வெளியேறி விட்டாராம்.. ஏதோ, வந்தோம், போனோம் என ஆஜராகி விட்டு புறப்பட்டு விட்ட நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற மாஜி அமைச்சர்களும் வாயே திறக்கவில்லையாம்.. கருத்து கேட்டவர்களுக்கு முறையான பதில் கூட அந்த கூட்டத்தில் இல்லையாம்.. இதனால் இலை கட்சியின் தொண்டர்களும் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் கூட்டம் முடிந்து விட்டதே என சோர்வடைந்துள்ளார்களாம்..
திமுக தேர்தல் அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் மக்களைக் கவரும் வகையில் ‘ஹீரோ’ வாக இருந்து வெற்றியைத் தேடித்தரும் நிலையில், உப்புக்கு சப்பாக இலை கட்சியின் தேர்தல் அறிக்கை குழு விசிட் முடிந்து போனதாம்.. 5 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை, இந்த முறையாவது மக்களைக் கவரும் வாக்குறுதிகள் இருக்கும் என்று நினைத்தால், அதற்காக யாருமே மெனக்கெடவில்லையே என்று அதிமுக தொண்டர்கள் அங்கலாய்க்கின்றனராம்.. இப்படி இருந்தால் எப்படி தேர்தலை சந்திக்க முடியும் என்று விரக்தியின் உச்சத்தில் உள்ளார்களாம் இலை கட்சியின் தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.


