Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நடிகர் கட்சிக்கு தாவிய இலைக்கட்சியினருக்கு நடந்து வரும் அவமதிப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நான்ெகழுத்து அதிகாரி ஒருவர் நாலாபுறமும் வாரி சுருட்டி வருகிறாராமே...’’ என சுடச்சுட டீயை ருசித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நீலகிரி மாவட்டத்துல புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நகராட்சியில் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பொறியாளர், கரன்சி குவிப்பதில் படு கில்லாடியாக இருக்கிறாராம்.. இந்த நகராட்சி எல்லைக்குள் கட்டிட அனுமதி, கட்டி முடித்த கட்டிடங்களுக்கு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு போன்ற அனைத்து விண்ணப்பங்களை இவர் பரிசீலனை செய்யும்போது, சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து, உங்கள் விண்ணபத்தில் அது சரியில்லை, இது சரியில்லை, என ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து, அதை நிராகரித்து விடுவாராம்..

பின்னர், அதை சரிசெய்ய கரன்சியை கறந்து விடுகிறாராம்.. இப்படி, அனைத்து விண்ணப்பத்திலும் காசு பார்க்கும் இந்த அதிகாரி, மேலிடத்தில் இருந்து தனது பதவிக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதால், மேலிடத்தையும் கவனித்து விடுவதால், இவர் காட்டில் மழைதானாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மேட்டூர் அணை திறப்பால் விசில் தலைவருக்கு சிக்கலாமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆண்டுதோறும் சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு தாமதமாகி போனதாம்.. எதிர்கட்சியின் தொடர் நெருக்கடியை தொடர்ந்து அணையை விசில் தலைவர் திறந்திருக்காரு.. ஆனால் அதில் பெரும் சிக்கல் இருப்பதாக அவருடைய அடிபொடிகள் சொல்றாங்க..

நாமக்கல் மாவட்டத்துல ஆண்டுதோறும் மாமன்னன் வல்வில் ஓரியின் விழா நடக்குமாம்.. ஆனால் அதில் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவிக்கும் மந்திரிகளின் பதவி அடுத்த விழாவில் இருக்காதாம்.. இதனால் அரசியல்வாதிகள் மாலை அணிவிக்காமல் அதிகாரிகளை வைத்து தான் நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு இருக்காங்களாம்.. அதை போலவே மேட்டூர் விவகாரத்தையும் சொல்றாங்க.. ஒரு முதல்வர் தண்ணீரை திறந்து வைத்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வாய்ப்பு அந்த முதல்வருக்கு கிடைக்காதாம். தற்போது விசில் தலைவர் மேட்டூர் அணையை திறந்து வச்சிருக்காராம்.. அடுத்தமுறை அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காது என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கிறாங்களாம்.. இதனால அவரது அடிபொடிகள் மனதில் சோகம் கவ்வியிருக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடைக்கோடி மாவட்டத்துல இலை கட்சியில் இருந்து நடிகர் கட்சிக்கு போனவங்க ரொம்ப அப்செட்டில் இருக்காங்களாமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் இருந்து நடிகர் கட்சிக்கு போனவங்களுக்கு, கட்சி சார்பில நடக்கிற எந்த நிகழ்ச்சிக்கும் தகவல் வருவதில்லையாம். இவுங்களே வாலண்டரியாக போனால் கூட கட்சி ஆபீசில் கூட கவுரவ குறைச்சல் தான் பரிசாக கிடைக்கிறதாம்.. இதற்கு அங்கேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் வந்து விட்டதாம்.. பழைய கட்சிக்காரங்களை தொடர்பு கொண்டு பேசி, நீயாவது ஒழுங்காக அங்கேயே இரு.. இங்கே வந்து விடாதே.. என கூறி வருகிறார்களாம். பொறுப்பு வரும், பதவி கிடைக்கும் என எண்ணி கட்சி தாவியவர்கள், எதுவுமே இல்லாமல் வீட்டுக்குள் இருந்து புலம்புகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடிகர் கட்சிக்கு தாவின ஆட்களின் நிலைமை எப்படியிருக்கு..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இடைத்தேர்தல் இப்போது இல்லை என்ற நிலையில் அல்வா மாவட்டத்தின் கடைசல் தொகுதியில் வென்று ராஜினாமா செய்தவர், மக்கள் பணி பாதிக்கப்படுகிறது, எம்எல்ஏவாக தொடர அனுமதி தாருங்கள் என்று ஐகோர்ட்டை நாடி இருக்கிறார். ஆனால், அந்த தொகுதியின் எம்எல்ஏ பதவி காலியாகி விட்டது என அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் கமிஷனுக்கும் அறிக்கை அனுப்பிய பிறகு இது சாத்தியமா என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் கட்சியினர். இதைத்தான் சேலம்காரரும் நடிகர் கட்சி குறித்து கேள்வி எழுப்பியபோது நையாண்டி செய்தாராம். ராஜினாமா செய்த சட்டப்புலிக்கும் இது தெரியும் என்ற நிலையில் இதில் அந்த நாயகரின் பங்கு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க இலை கட்சியிலிருந்து நடிகர் கட்சிக்கு தாவியவர்கள் ஏதாவது பெரிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்களாம். அவர்கள் எண்ணம் கனவாகி போக சனிக்கிழமை தோறும் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பனையூர் தற்போது வெறிச்சோடி கிடக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நேர்மையான அதிகாரியை நியமித்ததால் எல்லோரும் கலக்கத்தில் இருக்காங்களாமே..உண்மை தானா..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. சின்னஞ்சிறிய மாநிலத்தில் ராஜ் நிவாசின் உச்சபட்ச அதிகாரிக்கும் புல்லட்சாமிக்கும் பனிப்போர் நீடிக்கிறது. கடந்த ஆண்டு புல்லட்சாமி பரிந்துரைத்த சுகாதாரத்துறை அதிகாரியை நியமிக்காமல் உச்சபட்ச அதிகாரி வேறு ஒருவரை நியமித்து உள்ளாராம். தற்போது புல்லட்சாமிக்கு நெருக்கமாக இருக்கும் குமார் என்பவரை அந்த அதிகாரிக்கு மேல் நியமித்து உள்ளாராம்.

மேலும் புல்லட்சாமியின் துறைகளான சுகாதாரத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், தேர்வு கட்டுப்பாட்டு துறை என்பது உள்பட பல துறைகளுக்கு இவர் தான் தலைவராக நியமித்து உள்ளாராம். உயரதிகாரியான குமார், நேர்மையானவராம். கவர்னர் சொன்னால் கூட கேட்கமாட்டாராம். புல்லட்சாமிக்கு மட்டும் தான் கட்டுப்படுவாராம். இவர், வரும் வாரத்தில் பொறுப்பு ஏற்க உள்ளாராம். இதனால் புல்லட்சாமி துறைகளில் உள்ள அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனராம். டிரான்ஸ்பர் போட்டால் போட்டது தானாம். ராஜ்நிவாசின் உச்சபட்ச அதிகாரிக்கு மறைமுகமாக புல்லட்சாமி செக் வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன’’ என்றார் விக்கியானந்தா.