Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர் நாகார்ஜுனா குடும்பம் பற்றி அவதூறு; ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கால் மன்னிப்பு கேட்ட அமைச்சர்: தெலங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீண்டும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே.டி.ராமராவை விமர்சித்துப் பேசிய மாநில அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகியோரின் விவாகரத்து குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான ‘என்-கன்வென்ஷன் சென்டர்’ தொடர்பான மறைமுக ஒப்பந்தத்திற்கு சமந்தாவை இணங்க வைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதே விவாகரத்துக்குக் காரணம் என அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொண்டா சுரேகாவின் கருத்துகளுக்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன் நாக சைதன்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், சட்டரீதியான அழுத்தம் தொடர்ந்ததால், அமைச்சர் கொண்டா சுரேகா மீண்டும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நாகார்ஜுனா குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனது கருத்துகளால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்து, எனது வார்த்தைகளை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். எனினும், இந்த மன்னிப்பில் அவர் நடிகை சமந்தாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ளும் முயற்சியாக இந்த மன்னிப்பு பார்க்கப்படும் நிலையில், இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.