சர்வதேச திரைப்பட விழா விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்
பனாஜி: கோவாவில் சமீபத்தில் 56வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா’ படப் புகழ் ரிஷப் ஷெட்டியுடன் மேடையில் உரையாடினார். அப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் பாராட்டிப் பேசிய ரன்வீர் சிங், அதில் வரும் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று வர்ணித்ததுடன், அந்த தெய்வத்தைப் போல முகபாவனைகளைச் செய்து கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. துளு மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் சாமுண்டி தெய்வத்தை அவர் இவ்வாறு சித்தரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி ரன்வீர் சிங் மீது இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் பனாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், ‘புனிதமான தெய்வத்தை பேய் என்று கூறியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை ரன்வீர் சிங் காயப்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்கத் திரைப்பட விழாவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் ரன்வீர் சிங்கிற்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.