Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நடவடிக்கை தேவை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு நடந்து கொண்டு இருக்கும் வேளையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 9 கொலைகள் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தவெக ஆட்சிக்கு அழகல்ல. முதல்வர் விஜய் கூட்டியுள்ள 2 நாள் மாநாட்டில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் தற்போதைய இளம் தலைமுறை அதிகாரிகள் வரை அத்தனை பேரும் பங்கேற்றுள்ளனர்.

அவர்களிடம் முதல்வர் விஜய் தனது அரசின் நோக்கங்களை தெளிவுபடுத்தி இருக்கிறார். சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

இதற்காக, வருவாய்த்துறை, காவல்துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்பாடுகள் செய்தே ஆக வேண்டும். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும்.

மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்னை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். போதைப்பழக்கத்தை பொறுத்தவரையில் புலம் பெயர் தொழிலாளர்களை கண்காணிக்க முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் போதைப்பொருட்கள் கடத்தல் நடவடிக்கையை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீசாருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

அத்தனை அறிவுரைகளும் சரிதான். ஆனால் தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பலாத்காரம், போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. போலீஸ் துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் விஜய் இப்போது சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம். இனியும் முந்தைய திமுக அரசு மேல் பழிசுமத்த முடியாது. கடும் நடவடிக்கை தேவை. அப்படி எடுத்தால் தான் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் வரும். காரணம் சொல்லி இனிமேல் முதல்வர் விஜய் தப்பிக்கவும் முடியாது. அதை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்.