விசாகப்பட்டினத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற செயல் திட்டம்
*முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
திருமலை : விசாகப்பட்டினத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என முதல்வர் பேசினார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சிஐஐ கூட்டாண்மை உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. அப்போது, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் சஞ்சய் பல்லா, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்து, கடற்படை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய கடற்படைக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்டப் நிறுவனங்களை மாநிலத்திற்கு அழைப்பது குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, ஆத்மநிர்பர் பாரதத்தின் இலக்குகளுக்கு ஏற்ப உள்நாட்டு கப்பல் கட்டுமானம் மற்றும் கடற்படை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.
தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: விசாகப்பட்டினம் பல வாய்ப்புகள் மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களுக்கான மையமாக மாறப் போகிறது. விசாகப்பட்டினம் எதிர்கால நகரமாக மாறி வருகிறது. அதற்கேற்ப மாநில அரசும், கடற்படையும் இணைந்து செயல்பட வேண்டும். விசாகப்பட்டினம் ஒரு அறிவுப் பொருளாதார மையமாக மாறும். அதே நேரத்தில், விசாகப்பட்டினத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடற்படை வெறும் சண்டையிடும் படை மட்டுமல்ல. கடற்படை கடல் சார்ந்த அறிவை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. கடற்படை அருங்காட்சியகம் மூலம் இளைஞர்களுக்கு பாதுகாப்புத் துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
ஆந்திராவில் பாதுகாப்புத் துறையில் சேருவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடற்படையால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிலத்தை வழங்க மாநில அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.