Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உளவு செயலியா?

நாடு முழுவதும் புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியைத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உளவு பார்க்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து போய் உள்ளன. வாடிக்கையாளர்களின் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், அடையாள எண்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் ‘சஞ்சார் சாத்தி’ ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இதை தொடர்ந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய செல்போன்களிலும் இனிவரும் 90 நாட்களுக்குள் இந்தச் செயலியைத் தயாரிப்பு நிறுவனங்கள், முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்புத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால் மக்களின் அனுமதியின்றி அவர்களைக் கண்காணிக்கும் ‘வேவு பார்க்கும் கருவியாக’ இது செயலி செயல்படும் என எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும், விற்பனை செய்யப்படும் அத்தனை செல்போன்களிலும் சஞ்சார் சாத்தி ஆப் கட்டாயம் என்ற நிலையில் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்களது கொள்கைகளுக்கு முரணான இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்றிய அரசின் இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தும், ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி செல்போன் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய செல்போன்களில் சஞ்சாய் சாத்தி ஆப்பை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ளது. ஆனால் மொபைல் போன் பயனர்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் இந்த செயலியை நீக்க விருப்பம் இருக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியும் சர்ச்சை விட்டபாடில்லை.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சஞ்சார் சாத்தி ஆப்பை உளவு பார்க்கும் செயலி என்று அழைத்தார். இது அபத்தமானது. குடிமக்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு. இது தொலைபேசிகளை உளவு பார்ப்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக, அவர்கள் இந்த நாட்டை ஒவ்வொரு சாத்தியமான வடிவத்திலும் ஒரு சர்வாதிகாரமாக மாற்றுகிறார்கள் என்று கூறினார். சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஒன்றிய அரசின் நடவடிக்கை மற்றொரு பிக் பாஸ் கண்காணிப்பு தருணம் என்றார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்,இது ரஷ்யாவிலும் வட கொரியாவிலும் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உளவு பார்க்க விரும்புகிறார்கள் என்றார். ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் பிக் பிரதர் எங்களைப் பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கும் ஒன்றிய அரசிடம் பதில் இருக்கிறது. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில்,’ எதிர்க்கட்சிகள் ஒரு பிரச்சினையை தீவிரமாகத் தேடுகிறது . கட்டுக்கதைகளை உடைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

2024ம் ஆண்டில், நம் நாட்டில் ரூ.22,800 மதிப்புள்ள சைபர் மோசடி நடந்தது. மோசடியை எப்படி நிறுத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் எங்களிடம் கேட்கின்றன. அதை நிறுத்த நாங்கள் சாதாரண குடிமகனுக்கு சஞ்சார் சாத்தியை வழங்கும்போது, ​​அவர்கள் அதை பெகாசஸ் (உளவு பார்க்கும் கருவி) என்று கூறுகிறார்கள். அதைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு உண்மையைக் காட்ட முடியாது’ என்றார். உண்மையோ, பொய்யோ சஞ்சார் சாத்தி ஆப் தற்போது பிக் பாஸ் ஆப்பாக மாறிவிட்டது.