Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுங்கள்!

நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுங்கள்,இந்தச் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்ற நான் பிறந்துள்ளேன்.இங்கு ஒவ்வொரு மாற்றத்தையும் என்னால் செய்ய முடியும் என்ற எழுச்சியான எண்ணங்களைக்கொண்டு செயல்களாக மாற்றினால் நீங்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.எனவே மனதின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க உள்ளத்தில் உங்களைப் பற்றிய எண்ணங்களை உயர்த்துங்கள்.

நான் வலிமையானவன்,என்னால் எதுவும் செய்யமுடியும், “எதையும் சாதிக்க முடியும்’’ என்று எண்ணுபவரால் அவர் எண்ணப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்,தான் எதற்கும் லாயக்கில்லை, ’’என்னால் முடியாது’’ என்று நினைப்பவரின் வாழ்வு அவர் எண்ணத்திற்கு ஏற்றாற்போலவே மிகுந்த சிக்கல்களையும், துயரத்தையும் உடையதாக இருக்கும்.எனவே எதிர்மறைச்சிந்தனைகளைக் புறந்தள்ளி நல்ல எண்ணங்களை எண்ணுவது மிக முக்கியம்.

எண்ணங்களை நல்லதாக வடிவமைத்துக் கொள்வதற்கு முதலில் எதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்ளவும், நம்பத் தகுந்த நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்பார்க்க வேண்டும். அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான முயற்சிகளை செய்து சிறு வெற்றிகளை கூட கொண்டாட வேண்டும். இதனால் எதையும் சாதிக்கலாம் என்கிற எண்ணம் உருவாகும்.நேர்மறை எண்ணம் இன்னும் வலுப்படும்.

ஒரு நாட்டில் மன்னர் யானை மீது அமர்ந்து, நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது கடைத்தெருவில் ஒரு சந்தனக்கட்டை கடைப்பக்கம் வந்தபொழுது, மன்னர் அருகிலிருந்த மந்திரியிடம் மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனுக்கு தண்டனை தர வேண்டும் என்று தோன்றுகிறது என்றார்.

மன்னரின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார். அந்தக் கடைக்காரரிடம் யதார்த்தமாகக் கேட்பதுபோல், வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தார்.

என் கடைக்கு வாடிக்கையாளர் யாரும் இல்லை.கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர். சந்தனக்கட்டைகளை முகர்ந்துபார்க்கின்றனர். நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டுகின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுகிடையாது.இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். அவன் இறந்தால், அவனை எரிக்க, நிறைய சந்தனக்கட்டைகள் தேவைப்படும்.எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும் என்றார் கடைக்காரர்.

அவர் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு, முதல் நாள் அரசர் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரரின் கெட்ட எண்ணமே மன்னரின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவரறியாமல் உண்டாக்கி, அப்படிச் சொல்லவைத்தது என்று உணர்ந்தார் மந்திரி.

மிகவும் நல்லவரான அந்த மந்திரி, தான் யாரென்பதைக் காட்டிக்கொள்ளாமல், கடைக்காரரிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு ங்கினார். அதன்பின் மந்திரி, அந்தக் கட்டைகளை எடுத்துச்சென்று,அரசரிடம் தந்து, நேற்று அரசர் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரர், அரசருக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறினார்.

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசர் மிகவும் மகிழ்ந்தார்! அந்தக் கடைக்காரரைக் கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டார்!

அரசர், அந்தக் கடைக்காரருக்கு, சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார்! அரசர் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட வியாபாரி அதிர்ந்துபோனார்! அந்தப் பொற்காசுகளால் அவரது வறுமை தீர்ந்தது! இத்தனை நல்ல அரசரை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்கவேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினார் அந்தக் கடைக்காரர்.அத்துடன் மனம் திருந்தி நல்லவராகவும் ஆகிப்போனார்.

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால், அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.நல்ல எண்ணங்களுடன் நல்ல செயல்களை செய்பவர்கள் இந்த உலகில் தொடர்ந்து சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

பெங்களுருவில் 12-ஆம் வகுப்பை நிறைவுசெய்துள்ள திவா உத்கர்ஷா, தொடங்கிய ‘ப்ராஜெக்ட் சூர்யா’ திட்டம், ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான நிதியைத் திரட்டி, டைப் 1 நீரிழிவு நோயுடன் வாழும் 3,190 குழந்தைகள் உட்பட, 4,02,000-க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு இன்சுலின் உதவிகளை செய்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 17 வயது மாணவி திவா உத்கர்ஷா, சமூக தாக்கம் (Social Impact) பிரிவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா பட்டியலில் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் பிரிவில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் மிகவும் இளைய வயதுடையவராகவும் அவர் திகழ்கிறார்.

பெங்களூரில் பஸ்வேஸ்வர நகர் பகுதியில் உள்ள நேஷனல் அகாடமி ஃபார் லெர்னிங் பள்ளியில் 12-ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள திவா, விரைவில் அமெரிக்காவில் தொழில்துறை பொறியியல் (Industrial Engineering) படிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 பட்டியலில் நான் இடம்பெற்றதற்குக் காரணம் ‘ப்ராஜெக்ட் சூர்யா’ என்ற எனது இலாப நோக்கமற்ற அமைப்புதான். 2021-ஆம் ஆண்டு, எனக்கு 13 வயது இருக்கும்போது, எனது தம்பி சூர்யாவுக்கு டைப்-1 நீரிழிவு நோய் கண்டறியப்பட்டது.அந்த நோயின் சிகிச்சைக்காக எங்கள் குடும்பம் சந்தித்த பொருளாதார மற்றும் மனரீதியான சவால்களை பார்த்தபோது, இந்தியாவில் இதே நிலையை எதிர்கொள்ளும் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்தேன் என்கிறார் திவா.

திவா தனது பெற்றோர்களான உத்கர்ஷா லோகேஷ் மற்றும் பல்லவி உத்கர்ஷாவுடன் இணைந்து டைப்-1 நீரிழிவு நோய் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகே ‘ப்ராஜெக்ட் சூர்யா’வை தொடங்கினார். டைப்-1 நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் தினசரி இன்சுலின் ஊசிகள் போடும் நோயாகும். இந்தியாவில் நடுத்தர வருமானம் கொண்ட ஒரு குடும்பத்தின் வருமானத்தில் சுமார் 18 சதவீதம் இந்த நோயை நிர்வகிப்பதற்கே செலவாகிறது. மேலும், 80 சதவீத குடும்பங்களுக்கு அரசு மானியம் அல்லது மருத்துவக் காப்பீட்டு வசதி கிடைப்பதில்லை.2022-ஆம் ஆண்டில் மட்டும் 35,860-க்கும் மேற்பட்டோருக்கு டைப்-1 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படாமல் உயிரிழந்துள்ளனர். இந்த இடைவெளியை நிரப்புவதில் ’ப்ராஜெக்ட் சூர்யா’ முக்கிய பங்கு வகித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரின் முன்னெடுப்பு அமைப்பு இதுவரை 4.02 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சென்றடைந்துள்ளது.மேலும், டைப்-1 நீரிழிவு நோயுடன் வாழும் 3,190 குழந்தைகளுக்கு நேரடி உதவிகளை வழங்கியுள்ளது. மானியங்கள், நிறுவனங்களின் கூட்டாண்மை மற்றும் மக்கள் பங்களிப்பு மூலம் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான நிதியும் திரட்டப்பட்டுள்ளது.

இதுவரை 4,500 இன்சுலின் குப்பிகள், 2,500 குளுக்கோஸ் கண்காணிப்பு ஸ்ட்ரிப்கள் மற்றும் 1,000 இன்சுலின் சிரிஞ்சுகளை சிகிச்சை செலவை ஏற்க முடியாத குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்ட ஆஷா சுகாதாரப் பணியாளர்களுக்கு நீரிழிவு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் 49,500 பேரை சென்றடைந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 1,020-க்கும் மேற்பட்ட இலவச குளுக்கோஸ் பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன என்கிறார் திவா.

திவா மற்றும் அவரது குழுவினர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைத்தலைமையகம், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட சர்வதேச மேடைகளில் தங்கள் பணிகளை விளக்கியுள்ளனர்.

தற்போது ’ப்ராஜெக்ட் சூர்யா’, பெங்களூரு, புதுடெல்லி, வாரணாசி, மும்பை, காசியாபாத் உள்ளிட்ட இந்திய நகரங்களுடன் அமெரிக்கா, கனடா, மொராக்கோ, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகளை அமைத்துள்ளது. 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 35 அர்ப்பணிப்புள்ள பள்ளி மாணவர் தன்னார்வலர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திவா உத்கர்ஷா, 2023-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க ‘டயானா விருது’ பெற்றார்.அதேபோல், 2024-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற உலக நிலைத்தன்மை விருதில் (World Sustainability Award), இளைஞர் சமூகப் பிரிவில் கவுரவிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

13 வயதில் தொடங்கிய ஒரு சமூகப் பயணம், இன்று உலகின் மிக முக்கியமான இளம் தலைவர்களின் பட்டியலான ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியாவில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும், உறுதியான நோக்கமும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை திவா உத்கர்ஷா மீண்டும் நிரூபித்துள்ளார்.

திவா அவர்களின் சாதனைக்கு மிக முக்கிய காரணம் நேர்மறை எண்ணத்துடன் சமூக அக்கறையுடன் செயல்பட்டு இளம் வயதிலேயே சாதித்திருக்கின்றார். நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும், உங்கள் துறையில் நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியை வசப்படுத்துங்கள்.

ஆஹா எள்!

இரும்புச் சத்து, மெக்னீசியம், காப்பர், வைட்டமின் பி1 என்று அதிக சத்துக்களை உள்ளடக்கிய எள் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கிறது. ‘இளைத்தவனுக்கு எள்’ என்பது பழமொழி. அதாவது எள்ளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால், உடல் பலம் கூடும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். குழந்தைகளுக்கு எள் கலந்த உணவுகள் கொடுக்க உடலில் சத்துக்கள் அதிகரித்து வலிமையான தசைகள் வளரும். காலையில் ஒரு பிடி எள்ளை ஊற வைத்து உண்பது நல்லது. அப்படி முடியாதவர்கள் எள்ளுருண்டை, எள்ளுப் பொடி, எள்ளு சாதம் என எள்ளை அன்றாடம் நாம் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

- விஜயலட்சுமி