வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும்போது சோர்ந்து விடாமல் உற்சாகமாகவும், உத்வேகத்துடன் செயல்படுபவர்களே சிகரங்களை தொட்டு அவற்றில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். உற்சாகம் என்பது உடலில் பாயும் மின்னாற்றலாகும். உற்சாகம் உள்ளத்தில் இருக்கும்போது எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், துணிச்சலும் நமக்குள் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடுகிறது.
ஆகவே சோம்பல் என்னும் இருளை விலக்கி உற்சாகம் எனும் அக்னியை உள்ளத்தில் உடனே பற்ற வைத்து விடுங்கள்.எவ்வாறு உற்சாகமாக செயல்படுவது என்பது தானே உங்களுக்கு கேள்வி? உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக உங்களுடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதைச் செய்தாலும் அதை ஆர்வத்துடனும்,ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்.மனச் சோர்வுக்கும் வெறுப்பு உணர்வுக்கும் ஒரு போதும் மனதில் இடம் தரக்கூடாது, எந்த வேலையாக இருந்தாலும் அதை மகிழ்வோடும்,நேசிப்போடும் தொடங்கினால் அது நிச்சயம் வெற்றியின் திசை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
ஈடுபாடுடன் செய்யப்படும் வேலையில் தரமும் நேர்த்தியும் மிளுரும். அதன் பயனாகப் பாராட்டும் பெருமிதமும் கிடைக்கும்.
குருவும், சீடனும் வெளியூருக்கு ஒரு குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தனர். பகல் மறைய... இருள் பரவத் தொடங்கியது. தொடர்ந்து இரவில் பயணிக்க முடியாது என்பதால் பாதை ஓரம் இருந்த ஒரு மரத்தில் தங்கள் குதிரையை கட்டி வைத்துவிட்டு ஓய்வு எடுக்கத் தொடங்கினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் அவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சேர்ந்தாற்போல தூங்கி விடாதீர்கள்.இங்கு வழிப்பறித் திருடர்கள் அதிகம்.ஆகவே ஒருவர் தூங்கினால், மற்றொருவர் குதிரைக்கு காவல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் திருடர்களிடம் இருந்து உங்கள் குதிரை தப்பிக்கும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
என்ன செய்வது என்று யோசித்த குரு, நீ விழிப்போடு இரு! நான் உனது மடியில் தலை வைத்துத் தூங்குகிறேன். எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது சரியா? என்று சீடனிடம் கேட்டார். சீடனும் சரி குருவே,! நீங்கள் சொல்லியவாறு நான் விழிப்புடன் குதிரையை கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
சீடனின் மடியில் தலை வைத்து படுத்த குரு களைப்பின் காரணமாக உடனடியாக ஆழ்ந்து உறங்கி விட்டார்.ஆனால், சிறிது நேரத்துக்குள்ளாவே சீடன் எழுப்பி, குருவே எனக்கும் தூக்கம் வருகிறது! தூங்காமல் இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் எனக் கேட்டான்.அதற்கு ஏதாவது பிரச்னைகள் குறித்து தீவிரமாக யோசித்துக் கொண்டே இரு, தூக்கம் வராது என்று கூறிவிட்டு உறங்க தொடங்கினார் குரு.
நள்ளிரவு சுமார் 12 மணிக்கு திரும்பிப் படுக்கும்போது கண்விழித்த குரு, சீடன் உறங்காமல் இருப்பதை கவனித்து சீடனை! எதை நினைத்துக் கொண்டு தூங்காமல் இருக்கிறாய்? என்று வினவினார். குருவே! ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் தானாக வந்தனவா? அல்லது யாராவது கொண்டுவந்து அங்கு கொட்டினார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான் சீடன். நல்ல ஆராய்ச்சிதான்! எப்படியோ நீ தூங்காமல் இருந்தால் சரி! என கூறிவிட்டு தனது தூக்கத்தை தொடர்ந்தார் குரு.
மீண்டும் சுமார் இரண்டு மணி வாக்கில் கண்விழித்த போது சீடன் உறங்காமல் இருப்பதைக் கண்டு, இப்பொழுது எதை நினைத்துக் கொண்டு விழித்திருக்கிறாய்? என்றார். குருவே! கடல் நீரில் உள்ள உப்பு தானாக வந்ததா அல்லது யாராவது மூட்டை மூட்டையாக உப்பைக் கொண்டு வந்து கொட்டி கடல் நீரை உப்பாக மாற்றினார்களா? என யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்றான் சீடன். நல்ல யோசனை... தான் தூங்கி விடாதே! என்று கூறிவிட்டு குரு தூங்கிவிட்டார்.
விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கு எழுந்தார். அப்பொழுதும் சீடன் விழித்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தான்.அதை கவனித்தவர், சீடனை! இப்பொழுது எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு சீடன் குருவே குதிரை தானாக ஓடிவிட்டதா? இல்லை யாராவது பிடித்துக் கொண்டு சென்று விட்டார்களா? என யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்றானாம்.
இதுபோலத்தான் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் நாம் நோக்கத்தை மறந்து விட்டு தாக்கத்தைப் பிடித்துக் கொள்கின்றோம்.நிஜத்தை விட்டு விட்டு நிழலை தழுவிக் கொள்கிறோம்.
சீடன் எதற்காக விழித்திருந்தான்? குதிரைக்கு காவல் இருக்க தானே,! அதை மறந்து விட்டு சிந்தனையில் மூழ்கி விட்டால் என்ன செய்வது? வாழ்வின் நோக்கம் என்ன? என்பதை மறந்துவிட்டு வேறு எதையோ பிடித்துக் கொண்டு மன நிம்மதியை இழந்து புலம்புகிறோம்! மகிழ்ச்சியாக இருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கமா? மனசாட்சியுடன் இருக்க வேண்டாமா? “மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி என்பது ஒரு பாவச் செயல்” என்றார் மகாத்மா காந்தி.
ஆம்,! ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை பிடித்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டுமே தவிர, நோக்கத்தை மறந்து விட்டு மனம் போன போக்கிலே போகக்கூடாது. நோக்கிலும் நேர்மை தளராத நம்பிக்கை இருக்க வேண்டும்.
எதிலும் அர்ப்பணிப்பு அவசியம். அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யும் செயல்கள் ஆனந்தத்தின் நுழைவாயில்கள். அறம் மாறாத அர்ப்பணிப்பு இருந்தால் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சிப் பூக்கள் நெஞ்சில் மலரும், நம்பிக்கை வளரும், உற்சாகம் பொங்கும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
புனேவைச் சேர்ந்த 32 வயது டயானா பண்டோல் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தபோதும் கார் பந்தய வீராங்கனையாகவும் சாதித்து வருகிறார்.இந்த நிலையில், உலக அளவிலான ஃபெராரி பந்தயத் தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.
2025 நவம்பர் மாதம் முதல் துபாய், அபுதாபி, பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஃபார்முலா ஒன் பந்தய களங்களில் நடைபெறும் ஃபெராரி கிளப் சேலஞ்ச் மத்திய கிழக்குத் தொடரில் ஃபெராரி 296 சேலஞ்ச் காரை இந்தியாவின் டயானா பண்டோல் ஓட்டி பெருமை சேர்த்துள்ளார்.
டயானாவின் மோட்டார் பந்தய வாழ்க்கை 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் பெண் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ஜேகே டயர் பெண்கள் மோட்டார்ஸ்போர்ட் திட்டத்தின் மூலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து, இந்தியன் டூரிங் கார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வாகன் போலோ கப் போன்ற தேசிய பந்தயங்களில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த MRF சலூன் கார்ஸ் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றது இவரது மிகப்பெரிய சாதனையாகும். இதில் முன்னணி ஆண் போட்டியாளர்களைத் தோற்கடித்து இவர் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், மோட்டார் பந்தயத்தில் பெண்களுக்கான ஒரு முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
பந்தய களத்திற்கு உகந்த சக்தி வாய்ந்த ஃபெராரி 296 சேலஞ்ச் காரை ஓட்டும் டயானா, ஃபெராரி கிளப் சேலஞ்ச் தொடரில் சவாலான போட்டிகளை எதிர்கொள்ள உள்ளார். மணிக்கு 250 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் இவ்வாறான ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டவும், சர்வதேச தரத்திலான பந்தய களங்களின் தொழிற்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும் தீவிரமான உடல் மற்றும் மனப் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கு தன்னை தொடர்ந்து தயார்படுத்தி
வருகிறார் டயானா.
ஃபார்முலா ஒன் பந்தயத்தில் முதல் அதிகாரப்பூர்வ சோதனைக்கு முன்னதாக, சிமுலேட்டர் பயிற்சி, உடல் தகுதிப் பயிற்சிகளை இவர் மேற்கொள்ள உள்ளார். பந்தயத்தின் மீதான தனது ஆர்வத்திற்கு மறைந்த தனது தந்தையின் ஊக்கமே காரணம் என்கிறார் டயானா.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் இந்த புதிய கார் பந்தய அத்தியாயத்தில் பங்கேற்பதன் மூலம், பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த மோட்டார் ஸ்போர்ட் துறையில் டயானா பண்டோல் தடைகளை உடைத்துள்ளார்.
இந்தியாவில் இதுவரையில் இவர் பங்கேற்ற பந்தயங்களில் ஓட்டிய வாகனங்களை விட, ஃபெராரி 296 சேலஞ்ச் கார் நிச்சயம் ஒரு மேம்பட்ட தேர்வாக இருக்கும்.
டயானா பண்டோலின் மோட்டார் ஸ்போர்ட் பங்கேற்பு ஆனது சர்வதேச மோட்டார் பந்தயத்தில் இந்தியாவிற்கும், பெண் பந்தய வீரர்களுக்கும் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், இவரது ஃபார்முலா ஒன் கார் பந்தய ஈடுபாடு ஆனது கார் பந்தயங்களில் பாலின வேறுபாடுகளை தகர்த்து எறிந்து பெண்கள் எல்லாத் துறையிலும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இவரது பயணம் பல இந்தியப் பெண்களுக்கு மோட்டார் பந்தயம் மற்றும் பிற துறைகளில் தங்கள் கனவுகளைத் தொடர உத்வேகம் அளிக்க கூடியதாக உள்ளது.
இந்திய மோட்டார் பந்தய வீராங்கனை டயானா ஏராளமான விபத்துகளில் இருந்து தப்பித்துள்ளார், பந்தயங்களில் தோல்வியடைந்துள்ளார், சில சமயங்களில் கடைசி இடத்தையும் பிடித்துள்ளார். இருப்பினும், இரும்பு போன்ற மன உறுதி கொண்ட இந்த வீராங்கனையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு நிலையான வேலையைத் தவிர்த்து மோட்டார் பந்தயத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக, ஆரம்பத்தில் பலர் அவரைக் கேலி செய்து விமர்சித்தனர். சிலர், அவருக்கு அந்தத் தகுதி இல்லை என்றும் கூறினர். ஆனால் டயானா தனது அபாரமான சாதனைகளால் அவரை ஏளனம் செய்தவர்கள் மத்தியில் சாதித்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
டயானாவின் வெற்றிக்கு உந்து சக்தியாக செயல்பட்டது உற்சாகமான மனநிலை தான். உற்சாக மனநிலை, எத்தகைய கடினமான பணியையும் எளிதாக்கும் ஆற்றல் மிக்கது. எதையும் சாதிக்க இவ்வாறான மனோபாவமே அடித்தளமாகும். எனவே உற்சாகமாக செயல்படுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்.


