Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்!

உங்கள் மனோ பாவத்தை மாற்றுங்கள், வாழ்க்கை மாறும் என்பார் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ். தாமஸ் ஆல்வா எடிசன் ஆக்கபூர்வமான அறிவியல் மேதை. ஆனால் அவர் கூறுவார் மேதைமை என்பது 99 சதவீதம் வியர்வையும், ஒரு சதவீதம் ஊக்கமும் என்று அத்துடன் ஆக்கபூர்வமான மனோபாவத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

எடிசன் எதிலும் நல்லதையே கண்டவர். கெடுதியான சூழ்நிலையிலும் நம்பிக்கை தவறாமல் இருந்தவர். மின்விளக்கை கண்டறியும் முயற்சியில் அவர் பத்தாயிரம் முறை சோதனைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அந்தச் சோதனைகளை அவர் தோல்வி என்று நினைக்கவில்லை, அவை தீர்வுக்கு வெகு சமீபத்தில் என்னைக் கொண்டு சென்றன. எதையெல்லாம் பயன்படுத்தக் கூடாது, எதுவெல்லாம் வெற்றி தராது என்பதை அச்சோதனைகளின் மூலம் அறிந்தேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தகுதியான ஒன்றைத் தாம் கண்டுபிடிப்போம் என்பதில் அவருக்கு துளியும் சந்தேகமில்லை. அவருடைய நம்பிக்கை பற்றி இப்படி சொல்லலாம். வாழ்க்கையில் பல தோல்விகளுக்குக் காரணம் வெற்றிக்கு வெகு சமீபத்தில் தான் தாங்கள் அதைக் கைவிட்டோம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கவில்லை.

எடிசன் தம் ஆராய்ச்சிகளுக்காக நவீன ஆய்வுக்கூடம் ஒன்றை நியூ ஜெர்சி நகரத்தில் நிறுவி இருந்தார். அதை ஆய்வுக்கூடம் என்பதைவிட தொழிற்சாலை என்று சொல்ல வேண்டும். அத்தனை பெரிது 14மாடி கட்டிடங்களை கொண்ட ஒரு வளாகம் அது.அதன் பிரதான கட்டடம் கால்பந்தாட்ட மைதானங்கள் மூன்றின் அளவு இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அங்கே தான் எடிசனும், அவருடைய உதவியாளர்களும் புதிய கண்டுபிடிப்புக்கான கருத்துக்களை உருவாக்கினார்கள். மாதிரிகளை அபிவிருத்தி செய்தார்கள். பொருள்களை தயார் செய்து ஏற்றுமதி செய்தார்கள்.

1914 இல் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அந்த பிரதான கட்டிடம் தீ பற்றி எரிந்தது.எடிசன் மிகவும் நேசித்த இடம் அது.அவருடைய நேரத்தில் பெரும்பகுதியை அவர் அங்கேதான் கழிப்பார். உறக்கம் வந்தால் அங்குள்ள மேசை மீதே கவிழ்ந்து உறங்கி விடுவார்.

அந்த கட்டிடம் தீ பற்றி இருந்தபோது அவர் வெளியே நின்று கட்டிடம் எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த மகளிடம் உன் அம்மாவை அழைத்து வந்து காட்டு, இதே போல் ஒரு பெரிய தீயை அவர் பார்த்ததில்லை, இன்னொரு முறை பார்க்க போவதுமில்லை என்றார் வேடிக்கையாக.

எடிசனுக்குப் பதில் வேறு யாராக இருந்தாலும் நொறுங்கிப் போயிருப்பார்கள். ஆனால் அத்துன்ப நிகழ்வுக்குப் பிறகு அவர் இப்போது எனக்கு 69 வயது தான் ஆகிறது. இன்னொன்றை உருவாக்க முடியாத அளவுக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை. வாழ்க்கையில் இது போல் நிறைய பார்த்தாயிற்று என்றுதான் சொன்னார். அவர் கவலைப்படவில்லை, அந்த துயர நிகழ்வை அடுத்து தான் சொன்ன மாதிரியே மீண்டும் ஒரு புதிதாக ஒரு ஆய்வுக்கூடத்தை அவர் உருவாக்கி, மேலும் 17 ஆண்டுகள் தம் ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

எடிசனின் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் அவருடைய ஆக்கபூர்வமான மனோபாவத்தால் விளைந்தவை. ஆக்கபூர்வமான மனோபாவம் என்றால் என்ன? தெளிவான நேர்மறையான மனோபாவம், நல்ல நம்பிக்கையும், உயர்நோக்கமும் கொண்டது. அது நிச்சயமானது. உறுதியானது, சந்தேகத்திற்கு இடமற்றது.எடிசனைப் போல் நிலையான வெற்றி பெற்றவர்கள், எல்லா துறையிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வாழ்க்கை மீது நம்பிக்கையான, உறுதியான கண்ணோட்டம் உடையவர்கள்.

நீங்கள் சக்தி வாய்ந்த ஒரு மனிதராக திகழ விரும்பினால், ஆக்கபூர்வமான மனோபாவம் கொண்டிருப்பது அவசியம். அது தனிப்பட்ட முறையில் உங்களுடைய மனநிறைவின் அளவை உறுதி செய்வதோடு, மற்றவர்கள் உங்களுடன் இணைந்து செயல்படுவதிலும் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாகவே ஆக்கபூர்வமான மனோபாவம் கொண்டவர்கள் இளம் வயதாக இருந்தாலும், அவர்கள் கொண்ட இலக்கில் நிச்சயம் சாதிப்பார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

உலகின் முன்னணி வணிக பல்கலைகளில் ஒன்றான, அமெரிக்காவின், ‘ஸ்டான்போர்ட்’ பல்கலையின் சர்வதேச விருதை தமிழகத்தைச் சேர்ந்த சித்தாரா ரஷீத் என்பவர் வென்று சாதனை படைத்துள்ளார். உலகளாவிய தூய்மையான எரிசக்தி மற்றும் நிலையான நிதி கட்டமைப்புகளை உருவாக்குவதில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையின் கீழ் இயங்கும், ‘ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ மையம் சார்பில் ஆண்டுதோறும், ‘ஸ்டான்போர்ட் இம்பேக்ட் லீடர்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இது, உலகளவில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்படும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாணவருக்கும் தலா, 19.2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

இதுதவிர, தேர்வாகும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த விருதுக்கு, அப்பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பை நடப்பாண்டில் நிறைவு செய்த சித்தாரா ரஷீத் என்ற இந்திய மாணவி தேர்வாகி உள்ளார்.

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இவருக்கு, நிதி, காலநிலை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்களித்ததற்காக இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,யில் பொருளாதார பிரிவில் ஒருங்கிணைந்த முதுகலைப்பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் யேல் பல்கலையில் வளர்ச்சி பொருளாதாரம் பிரிவில், மாஸ்டர்ஸ் டிகிரி பெற்றார். காலநிலை மாற்றம் சார்ந்த நிதித்துறையில் சித்தாராவுக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையில் பணியாற்றிய போது, தூய்மை ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திட்டப்பணிகளை, 384 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொண்டார். தவிர, ஐ.நா.,வின் காலநிலை மாற்றம் மாநாடு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மேடைகளில் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துகளை முன்வைத்துள்ளார்.

சித்தாரா ரஷீத் போன்ற பெண்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு,செயல்களில் ஈடுபட்டு கல்வி மற்றும் சமூக சேவையின் மூலம் உலகளவில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள். அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெற்ற அங்கீகாரம், இந்திய பெண்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.மேலும் எத்தனை சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, தினமும் ஒரு குறிக்கோளை அடைய முயலுங்கள். சித்தாரா ரஷீத்தைப் போன்று ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்படி வளர்த்துக் கொண்டால் ஆக்கபூர்வமான செயல்களில் நிச்சயம் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு சொல்லும் உன்னதப்

பாடமாகும்.