Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு கபே நடத்தி சாதனை தலைநிமிர்ந்த அக்னி பூக்கள்

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகி முகத்தையே மறைத்து கொண்டு முடங்கிய பெண்கள் இன்று தங்களுடைய மன வலிமையில், அதனை வென்று தலை நிமிர்ந்து, மெகராலியில் ‘ஷெரோஸ்’ என்ற கபேவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் ஆசிட் தாக்குதலுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாக குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. இதே பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு பதிவாகி வருவதாக மேலும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், இது போன்ற கொடூரமான வன்முறை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த தாக்குதலில் பாதிக்கப்படும் பெண்கள் மிகவும் கொடூரமான நரகமான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இந்த தாக்குதலில் இருந்து மீள்வது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. மிகவும் உயிருக்கு அச்சுறுத்தலான காயங்கள் ஒருபுறம், மறுபுறம் தரும் பின் விளைவுகள். பல்வேறு கொடிய தாக்கங்களில் இருந்து மீள்வது என்பது நீண்ட நெடிய போராட்டமாக இருந்து வருகிறது.

அப்படியான நீண்ட நெடிய போராட்டத்தில் இருந்து மீண்டு, டெல்லியில் மெகராலியில்,‘ஷெரோஸ்’ என்ற கபேவை ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெற்றிகரமாக நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் வருவதற்கே பயந்த இந்த பெண்கள் தற்போது, தலை நிமிர்ந்து தங்களுக்கான பொருளாதார சுதந்திரத்தையும், தங்களுக்கான அடையாளத்தையும் மீட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரை சேர்ந்தவர் ரூபா (29 ) வாடிக்கையாளர்களை முகத்தை காட்டி வரவேற்க பயந்தவர். சாப்பிடும் போது கூட, முகத்தை மூடிக் கொண்டே சாப்பிட்டவர். ஆனால், இன்று தனக்கான அடையாளத்தை பூஜ்ஜியத்தில் இருந்து செதுக்கியதாக கூறுகிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நான் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இந்த கபேயை தொடங்கிய போது, வாடிக்கையாளர்களை முகத்தை காட்டி வரவேற்க தயங்குவேன். ஆனால், இன்று அனைவரையும் தலை நிமிர்ந்து வரவேற்கிறேன். தற்போது வரை என்னால் இதை நம்ப முடியவில்லை,’ என்று கூறியுள்ளார்.

ரூபாவிற்கு 13 வயதாக இருந்த போது, தூங்கி கொண்டிருந்த அவர் மீது அவருடைய மாற்றாந்தாய் ஆசிட் வீசியுள்ளார். அப்போது அவர் 9 ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். இந்த தாக்குதலுக்கு பிறகு, மருத்துவமனையே கதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, அதில் இருந்து மீண்டு தனக்கான பாதையை அமைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தாயை இழந்தது எனக்கு ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஆனால், ஆசிட் தாக்குதலுக்கு பிறகு அதைவிட, இந்த சவால் எனக்கு கடினமாகி போனது. அதன் பிறகு , வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். வேலை அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. அதன் பிறகு , இங்கு வேலையில் சேர்ந்த பிறகு,பொருளாதார ரீதியாக நான் சுதந்திரம் பெற்றேன்.அன்று முதல், நான் புதிய ரூபாவாக மாறி போனேன்.இந்த கபேவில் நான் முக்கிய பொறுப்பை பெற்றேன். இந்த பொறுப்பை பெறுவதற்கு முன்பு நாடுமுழுவதும் உள்ள ஷிரோஸ் கபேக்களில் பயிற்சி பெற்றேன்,’ என்று புன்னைக்கிறார்.

இந்த கபேவில் வேலை செய்து வரும் மற்றொருவரான காஜல் (19) மிகவும் கசப்பான கதைகளுடன் டெல்லி வந்துள்ளார். ஜார்க்கண்டின் ஹண்டஙா ஜங்கை சேர்ந்த இவர். 2022 ம் ஆண்டு 10 வகுப்பு தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்த நபர் அவருடைய தம்பியை தாக்குவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது தயாருடன் இணைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதற்கு பழிவாங்க அந்த நபர் அடியாட்களுடன் வீடு புகுந்த காஜல் மீது ஆசிட் வீசியுள்ளார். அதன் பிறகு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர், சிகிச்சையில் இருந்து தேறியவர் டெல்லியிலேயே வேலையில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து காஜல் கூறுகையில், ‘டெல்லிக்கு வந்த போது, எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் கடந்த பல மாதங்களாக கபேவில் பணியாற்றி வருவதால், இந்த பணியில் நான் நிபுணராக மாறி வருகிறேன்.பள்ளியில் படித்த சப்ஜெக்ட் கணிதம்.அதில் தான் அதிக மதிப்பெண் எடுப்பேன். இந்த தாக்குதலின் போது, சிகிச்சையின் போது படிப்பில் சிறந்து விளங்கி என்ன பயன்? இனி நான் என்ன செய்ய முடியும் என்று முடங்கி போனேன். ஆனால், இன்று இந்த கபேவில் நிதி கவுன்டரை கையாள்கிறேன்,’ என்றார்.

இதே போன்று, மேலும் சில பெண்களும் இந்த கபேவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நெருப்பில் விழுந்து, தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி பீனிக்ஸ் பறவையை தங்களுக்கான அடையாளத்தை அக்னி சிறகுகளில் விரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.