Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அபுதாபியில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 10 டிரோன்கள் பறிமுதல்: ஆசாமிக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வலை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தப்பட்ட 10 டிரோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

அபுதாபியில் இருந்து கடந்த 30ம் தேதி சென்னை வந்த விமானத்தில் இருந்த 224 பயணிகளும் சுங்கச் சோதனையை முடித்து விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றனர். அப்போது, கன்வேயர் பெல்டில் ஒரு பெரிய பை மட்டும், யாரும் எடுக்காமல் சுற்றிக்கொண்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், பையை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். அதில், அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதி செய்த அதிகாரிகள், அந்த பையை இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பயணிகள் யாராவது தவற விட்டு சென்றிருக்கலாம் என்று, அலுவலகத்தில் வைத்திருந்தனர். ஆனால் 2 நாட்கள் ஆகியும், அந்த பைக்கு உரிமைகோரி யாரும் வரவில்லை. மேலும், பையில் இருந்த டேக் கிழிக்கப்பட்டிருந்ததால் பையின் உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள், அந்த பையை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சுங்க அதிகாரிகள் பையை திறந்து சோதனை செய்தனர். அந்த பைக்குள் இருந்த ஏராளமான சாக்லேட், பிஸ்கட் பாக்கெட்களுக்கு இடையே 10 டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை சோதனை செய்தபோது, அந்த டிரோன்கள் ஒவ்வொன்றும் 1.7 கிலோ எடையுடன் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதும், சுமார் 15 முதல் 20 கி.மீ தூரத்தை, மிகவும் துல்லியமாக வீடியோ, போட்டோ எடுக்கும் திறன் கொண்டவை என தெரியவந்தது.

இந்த வகை டிரோன்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு தேவை என்றால், முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் மற்றும் பி சி ஏ எஸ் சிறப்பு அனுமதி பெற்று, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒன்று அல்லது இரண்டு டிரோன் மட்டும் எடுத்து வரலாம். இதேபோல் ஒரே நேரத்தில் 10 டிரோன்கள் எடுத்துவர அனுமதி இல்லை.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட 10 டிரோன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து இதில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், டிரோன் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 10 டிரோன்களை வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வந்த மர்ம ஆசாமி யார், கடத்தல் ஆசாமிக்கும் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.