Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிலும் முதலிடம்

ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம், மாநில அரசுகள் வாரியாக, ஒன்றிய நிர்வாக பகுதிகள் அனைத்தையும் ஆய்வு செய்து 2022-23ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள், மகப்பேறுக்கு, மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று, தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மேற்கண்ட நிதியாண்டில், நாடு முழுவதும் நடந்துள்ள ஏற்றுமதியில், தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீதம் பங்கு வகிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் மற்றும் பராமரிப்பில் 3.31 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

மருத்துவமனைகளில் பாதுகாப்பாக பிரசவம் நடப்பதில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. குழந்தை பராமரிப்பில் தமிழ்நாடு 89.9 சதவீதம் பெற்று முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மாநிலங்கள், தொழில்துறை முன்னேற்றம் காண்பதில் பெரிதும் துணை புரிவது சிறப்பு பொருளாதார மண்டலங்கள். இதில், தமிழ்நாடுதான் அதிக அளவில் அதாவது, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023ம் ஆண்டுக்கான அறிக்கை இதை புலப்படுத்தியுள்ளது.

மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில்கூட 21 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன. இப்படி, தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடம் பெற்று வருகிறது. இதற்கு, ஒன்றிய அரசின் ஆவணங்களே பெரும் சாட்சியாக உள்ளன. தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்னென்ன? என்பதற்கு இந்த அறிக்கையே பிரதான ஆதாரம். இந்திய அளவில், அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

இந்தியாவிலேயே மிக அதிகமாக தொழில்துறை மயமான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீத ஆலைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இதை, ஒன்றிய அரசின் ஏஜென்சியான ‘Invest India’ வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மையமாக சென்னை திகழ்கிறது. இங்குதான், பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. வாகன உதிரிபாக ஆலைகள், முக்கிய ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோல்பொருள் ஆலைகள், ஜவுளி ஆலைகள், சிறு, குறு, நடுத்தர ஆலைகள் என சென்னை மிகப்பெரிய தொழில்துறை மையமாக உயர்ந்து நிற்கிறது. இந்தியாவில் மொத்தம் மூன்று ஐபோன் ஆலைகள் உள்ளன. இதில் பாக்ஸ்கான், பெகாட்ரான் ஆலைகள் சென்னை அருகே உள்ளன. ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் ஐபோன் ஆலையும் அமைய இருக்கிறது. மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது.