நடிகர் அமீர்கான் தயாரித்துள்ள பட்வார் 1947 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் அமீர்கான் தயாரித்துள்ள ‘பட்வாரா 1947’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தி நடிகர் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘பட்வாரா 1947’ திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில் படத்தில் சன்னி தியோல், பிரீத்தி ஜிந்தா, ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, இரு நாட்டினரும் தாங்கள் விரும்பிய நாட்டில் குடியமர்வதை கதைக்கருவாக கொண்டு ‘பட்வாரா 1947’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்படுவதை தடுக்க அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள், கேபிள் டிவிகள் என 33 நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி அமீர்கான் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சௌந்தர், பட்வாரா 1947 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.