பொதுவாகவே நம் உடலில் நல்லது செய்யும் அல்லது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் குடல் பகுதியில் தான் இருக்கின்றன. ஆனால் நமது சீரற்ற வாழ்க்கைமுறை, எதையும் அவசரமாக சமைப்பது சாப்பிடுவது, வெளிப்புற ஆதாரங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து நமது குடலை மிகவும் பலவீனமாக மாற்றி விட்டன. இதன் காரணமாகத்தான் செரிமானம் வேகம் குறைந்து நாளடைவில் உடல் எடை, ஒபிசிட்டி, அதனுடன் நீரிழிவு நோய், தைராய்டு, ரத்த அழுத்தம், உள்ளிட்ட பல பிரச்னைகள் உண்டாகி மருத்துவரை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமாக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் காரணமாக பக்க விளைவுகள் ஒருபுறம் என குடலுக்குள் இருந்து நல்லது செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் அத்தனையும் அழிந்து விடுகின்றன. இதனால் ஆபத்தான கேன்சர் வரை நம்மைத் தாக்குகின்றன. இதற்குத் தான் முழுமையான ஆலோசனைகள் வழங்கு கிறார் ஆபா அப்பாசாமி.
“நமது செரிமானப் பாதையில் கோடிக்கணக்கான நன்மை மற்றும் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. ஒரு அடர்ந்த காட்டில் மரங்களும் விலங்குகளும் சமநிலையுடன் வாழ்வது போல, குடலில் தொண்ணூறு சதவீதம் நல்ல பாக்டீரியாக்களும், பத்து சதவீதம் கெட்ட பாக்டீரியாக்களும் இருக்க வேண்டும். ஏனெனில், உடலின் எண்பது சதவீத நோய் எதிர்ப்பு சக்தி குடலிலேயே உற்பத்தியாகிறது. அதிகப்படியான ஆன்டிபயாடிக் மருந்துகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை இக்காட்டை அழிக்கும் தீயைப்போல நல்ல பாக்டீரியாக்களை முற்றிலும் அழித்து விடுகின்றன” இதை தன்னுடைய சொந்த வாழ்வில் இருந்து கண்டுபிடித்திருக்கிறார் ஆபா.
ஆபா அவர்களின் கணவர் தீவிர குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆன்டிபயாடிக் மருந்துகளால் அவரது குடல் ஆரோக்கியம் சீர்குலைந்தபோது, அவர் ‘மில்க் கெஃபிர்’ (Milk Kefir) என்ற புரோபயாடிக் உணவைக் கண்டறிந்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து உட்கொண்டதால் அவரது கணவரின் குடல் ஆரோக்கியம் மீண்டதோடு, ஆபாவுக்கு இருந்த தீவிர மூட்டுவலி மற்றும் பல் கூச்சப் பிரச்னைகளும் குணமாகின. மேலும், தனது மகனின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்கும், புற்றுநோய் சிகிச்சையால் குமட்டல் மற்றும் செரிமானக் கோளாறால் அவதியுற்ற நோயாளிகளுக்கும் புரோபயாடிக் உணவுகள் பெரும் நிவாரணம் அளித்ததை அவர் நேரில் உணர்ந்தார். புரோபயாடிக் உணவுகள் தான் இதற்கு ஒரே தீர்வு என்கிறார் ஆபா.
“குடல் நுண்மங்களைப் புதுப்பிக்க பாரம்பரிய நொதித்தல் உணவுகள் (Fermented Foods) மிகவும் அவசியம். மில்க் கெஃபிர் மற்றும் கம்பூஷா ஆகியவை குடலுக்குத் தேவையான கோடிக்கணக்கான நல்ல பாக்டீரியாக்களை வழங்கும் பானங்கள். பீட் க்வாஸ், ஜிஞ்சர் ஏல், சவற்கிராட் மற்றும் கிம்ச்சி போன்ற உணவுகள் இயற்கையான முறையில் நொதிக்க வைக்கப்பட்டு செரிமானத்தைச் சீராக்குகின்றன. இவற்றுடன், நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமையும் வெங்காயம், பூண்டு, வாழைக்காய் போன்ற பிரிபயாடிக் (Prebiotics) நார்ப்பொருட்களும் குடல் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படுகின்றன” நமது சமையலறையில் இருந்து நமக்கான மருந்துகளை உருவாக்க முடியும் என்கிறார் ஆபா.
“கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை நிறமிகளும், அதிகப்படியான சர்க்கரை மற்றும் ரசாயனங்களும் நிறைந்துள்ளன. எனவே, கடைகளில் வாங்கும் செயற்கை மாத்திரைகளை விட, நமது சமையலறையில் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுகளே தலைசிறந்த மருத்துவம். இஞ்சி, எள், வெந்தயம் போன்ற அஞ்சறைப் பெட்டிப் பொருட்கள் உடலின் அழற்சியைக் குறைக்கின்றன. ஒவ்வொரு நபரின் உடலமைப்பும் மாறுபட்டது என்பதால், அவரவர் உடலுக்கு ஏற்ற நொதித்தல் உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தினமும் சமையலறையில் தயாராகும் இயற்கை புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வதே குடல் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கும். இதற்கு நாம் தினம்தோறும் எடுத்துக் கொள்ளும் தயிர் மற்றும் மோர் மட்டும் போதாது. இன்னும் அதீத பயோ நுண்ணுயிர்கள் இருக்கும் வலிமையான புரோபயாடிக் உணவுகளை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம்” என்னும் ஆபா இரண்டு எளிமையான புரோபயாடிக் உணவுகளுக்கு இங்கே செய்முறைகளும் கொடுத்திருக்கிறார்.
வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய இரண்டு புரோபயாடிக் செய்முறைகள்
கேபேஜ் (முட்டைகோஸ்) பெர்மென்டட் வெஜிடபிள்ஸ் (சௌர்கிராட்)
தேவையான பொருட்கள்:
நறுக்கிய முட்டைகோஸ் - 1 கிலோ
நறுக்கிய கேரட் மற்றும் ஆப்பிள் (விருப்பப்பட்டால்) - தேவையான அளவு
இயற்கை உப்பு (இமயமலை இளஞ் சிவப்பு உப்பு / கல் உப்பு) - 20 கிராம் (2%)
(குறிப்பு: அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அயோடின் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.)
செய்முறை:
* நறுக்கிய முட்டைகோஸுடன் 20 கிராம் உப்பைச் சேர்த்து, கைகளால் நன்றாகப் பிசைய வேண்டும்.
* உப்பு முட்டைகோஸுடன் சேர்த்து பிசையும் போது, அதில் உள்ள நீர்ச்சத்து வெளியாகும்.
* முட்டைகோஸ் நன்றாக மென்மையாகி நீர் வெளியானதும், அதனுடன் நறுக்கிய கேரட் மற்றும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
* இந்த கலவையை ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் (Glass Jar) காற்று இடைவெளி இல்லாதவாறு நன்றாக அமுக்கி அடைக்க வேண்டும்.
* முட்டைகோஸிலிருந்து வெளியான நீர், காய்கறிகளுக்கு மேல் மிதக்குமாறு இருக்க வேண்டும் (காய்கறிகள் காற்றில் படாமல் திரவத்திற்குள் மூழ்கி இருப்பது மிக முக்கியம்).
* பாட்டிலை மூடி அறை வெப்ப நிலையில் நொதிக்க (Ferment) விடவும்.
* பிறகு நொதித்த உடன் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கவும்.
மில்க் கெஃபிர் (Milk Kefir)
தேவையான பொருட்கள்:
கெஃபிர் (Kefir Grains) - 3/4 பங்கு (தோராயமாக)
குளிர்ந்த பால் - 1 லிட்டர்
செய்முறை:
* ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் 1 லிட்டர் குளிர்ந்த பாலை ஊற்றவும்.
* அதனுடன் கெஃபிர் சேர்த்து லேசாகக் கலக்கி, மூடி வைக்கவும்.
* அறை வெப்பநிலையில் (Room Temperature) 24 மணி நேரம் அப்படியே வைக்கவும் (முதல் நொதித்தல்).
* 24 மணி நேரத்திற்குப் பிறகு, பாலை வடிகட்டி கெஃபிரை தனியாகப் பிரித்தெடுக்கவும். (இந்த கெஃபிரை அடுத்த முறை பால் நொதிக்க வைக்க மீண்டும் பயன்படுத்தலாம்).
* பிரித்தெடுத்த கெஃபிர் பாலை மீண்டும் 24 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் (இரண்டாவது நொதித்தல்).
* மொத்தம் 48 மணி நேர செயல் முறைக்குப் பிறகு, சிறந்த சத்துக்கள் நிறைந்த சுவையான மில்க் கெஃபிர்தயார்.
பயன்படுத்தும் முறை - பராமரிப்பு:
* தினமும் 100 மி.லி முதல் 200 மி.லி வரை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
கெஃபிரை எப்போதுமே குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்துப் பராமரிக்க வேண்டும்.
முழுமையாகவே சமையல் கலை மூலம் உருவாக்கப்படும் மருந்துகள் குறித்த வர்க்ஷாப் டாக்டர் இர்ஃபானா (சரும சிகிச்சை நிபுணர்) தலைமையில் நடந்தது. இந்தப் புரோ பயோடிக் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் இயற்கையாகவே சருமத்தில் உள்ள துளைகள் மறைந்து சருமம் உள்ளிருந்து பளபளப்பு கொடுக்கும் . மேலும் இதனுடன் இணைந்த ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், எளிமையான சரும பராமரிப்புகள் எடுத்துக்கொள்ள சரும பிரச்னைகளும் எளிதில் தீர்க்கப்படும் என்கிறார் மருத்துவர் இர்ஃபானா”



