இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மைய சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆம் ஆத்மியும் பங்கேற்கவில்லை. டெல்லி முழுவதும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரசுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் நம்மை சார்ந்து வளர்ந்து வந்தது.
ஆனால் இன்று அவர்கள் நம்மை முதுகில் குத்திவிட்டார்கள் என இருந்தது. இதுபோன்று மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் மற்றும் பிற தலைவர்களின் பெயரிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்து இருக்க முடியாது என்ற வாசகங்களும் டெல்லி வீதிகளில் இடம்பெற்று இருந்தன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தவெகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கு மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் மற்றும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருந்தார் மம்தா பானர்ஜி. இந்தியா கூட்டணி என்றாலும் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. இக்கூட்டணி இருந்தாலும் மாநில கட்சிகளுடன் மோதல் போக்குடன் பிடிவாதமாக காங்கிரஸ் கட்சி இருந்து வந்துள்ளது. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பங்கேற்றார். தமிழகத்திலிருந்து வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்துக்கு பிறகு விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதில், காங்கிரஸ் செயல் விருப்பத்தக்கது அல்ல. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் செயல்பாடு திமுக, திரிணாமுல், மார்க்சிஸ்ட்டை பலவீனப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது. காங்கிரஸ் தனது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என கூறியுள்ளார்.
பாஜ அரசுக்கு எதிராக தேசிய அளவில் வலுவாக இருந்த இந்தியா கூட்டணியை சுயநலத்துக்காக காங்கிரஸ் பலவீனப்படுத்திவிட்டது. குறிப்பாக மாநில கட்சிகள் கூடவே இருந்து அதன் வளர்ச்சியை முடித்து வைத்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மொத்தத்தில் இந்தியா கூட்டணி கூட்டம் ஒருமித்த கருத்துகள் எடுக்கப்படாமல் தள்ளாடும் கூட்டமாக முடிந்துவிட்டது.


