Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியை கூட தாக்குபிடிக்க முடியவில்லை; பீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூட தாக்குபிடிக்க முடியவில்லை, பீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. “நாங்க இருக்கோம். நாம மீண்டும் வருவோம்!”. இந்த சொற்கள் போதுமே, எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையை கொடுக்க. நம்மை போல் வெற்றி பெற்றவர்களும் இல்லை; தோல்வியை கண்டவர்களும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக்கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொண்டதுமில்லை. அதனால்தானே பீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்.

ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூட தாக்குபிடிக்க முடியவில்லை. ஆனால் நாம், கொள்கை உறவாலும் - உடன்பிறப்பு எனும் நேசத்தாலும் பிணைக்கப்பட்டு, ஒரு குடும்பம் என ஆல் போல் வேரூன்றி வளர்ந்து நிற்கின்றோம். 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, உங்களின் உள்ளங்களை அறிந்து வந்து, ஒளிவுமறைவின்றி என்னிடம் வழங்க சொன்னேன். அதுமட்டுமின்றி, உங்கள் குரல் ஒலித்திட எவ்வித தயக்கமும் கூடாதென “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளத்தையும் உருவாக்கினேன்.

நீங்களும் உங்கள் எண்ணங்களை உரிமையோடும் அக்கறையோடும் எடுத்து சொன்னீர்கள். உங்களது எண்ணங்களின் அடிப்படையில், மறுசீரமைப்பு ஆலோசனை குழுவையும் இப்போது அமைத்திருக்கிறேன். இந்த பணிகளை எல்லாம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் இன்று அயலக பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இரு வாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்; அங்கு நாள்தோறும் வரும் உங்கள் முகங்கள்தான் என் நெஞ்சில் நிழலாடும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.