ஐந்து வயது குழந்தை. மற்ற குழந்தைகளைப் போலவே விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு நாள், அவளது பெற்றோர் அவளது முகத்தில் ஒரு சிறிய மாற்றத்தைக் கவனித்தனர். முதலில் அது பெரிதாகத் தெரியவில்லை. “வளர வளர சரியாகிவிடும்” என்று நினைத்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த மாற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோதுதான், அது பேரி ரோம்பெர்க் சிண்ட்ரோம் (Parry-Romberg Syndrome) என்ற அரிய நோய் என்று தெரியவந்தது. முகத்தின் ஒரு பகுதியிலுள்ள தசைகள் மற்றும் திசுக்கள் படிப்படியாகச் சுருங்கி, முகத்தின் வடிவம் மாறச் செய்யும் இந்த அரிய நோய், உலகில் மிகச் சிலருக்கே ஏற்படுகிறது. அவர்களில் ஒரு சிறுமிதான் கேயா.
கேயாவுக்கு உடல் வலியை விட மன வலி அதிகம். பள்ளியில் கேயாவின் முகத்தைப் பார்த்து சிலர் ஆச்சரியப்பட்டனர். சிலர் தொடர்ந்து உற்றுப் பார்த்தனர், சிலர் பயந்தார்கள். இன்னும் சிலர், “இது தொற்றுநோயா?” என்று விலகிச் சென்றனர். அப்போது கேயாவுக்கு தனது முகத்தில் என்ன பிரச்சினை என்று முழுமையாகப் புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் தன்னை வேறுபட்டவளாகப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.
வயது அதிகரிக்க அதிகரிக்க அந்த உணர்வு அவருக்குள் ஆழமாகப் பதிந்தது. குறிப்பாக இளம்பெண்ணாக மாறிய காலத்தில், சமூகத்தின் அழகு பற்றிய பார்வை கேயாவை மிகவும் பாதித்தது. பேருந்து, கடை, கல்லூரி, பொதுவெளி என எங்கு சென்றாலும், பலரின் பார்வை முதலில் கேயாவின் முகத்தில்தான் நின்றது. சிலர் நேரடியாகவே கேள்விகள் கேட்டனர். சிலர் பின்னால் நின்று கிசுகிசுத்தனர், சிலர் கேலி செய்தனர். அந்தப் பார்வைகளும், வார்த்தைகளும் கேயாவின் தன்னம்பிக்கையை மெதுவாகக் குலைத்தன.
ஒரு நாள் அவளுடைய வாழ்க்கையில் மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் நடந்தது. “உன் முகத்தை மறைத்தால்தான் யாராவது உன்னைத் திருமணம் செய்து கொள்வார்கள்” என்று ஒருவர் வெளிப்படையாகச் சொல்லி
யிருக்கிறார். அது ஒரு சாதாரண வாக்கியம் அல்ல. ஒரு பெண்ணின் சுயமரியாதையையே கேள்விக்குள்ளாக்கிய வார்த்தை. அந்த ஒரு வாக்கியம், “நான் அழகாக இல்லையா?”, “நான் மற்றவர்களைப் போல வாழ முடியாதா?”, “என்னை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?” என்ற கேள்விகளை கேயா மனதில் விதைத்தது.
பல ஆண்டுகள் கேயா கண்ணாடியைப் பார்க்கவே தயங்கினார். புகைப்படம் எடுக்க விரும்பவில்லை. புதிய மனிதர்களைச் சந்திப்பதற்கும் பயந்தார். தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே அவருடைய ஒவ்வொரு நாளின் மிகப்பெரிய கவலையாக மாறியது.
வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கேயாவின் வாழ்க்கையிலும் மாற்றம் தொடங்கியது. அதற்குக் காரணம் அவருடைய நண்பர்கள்.
“உன் முகம் உன் அடையாளம் கிடையாது, வயதுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். உன் மனசுதான் உன்னை வரையறுக்கிறது” என்று அவர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். அந்த அன்பும், ஏற்றுக்கொள்ளுதலும், கேயாவுக்குள் புதிதாக ஒரு நம்பிக்கையை உருவாக்கியது.
அதன்பிறகு அவர் மெதுவாகத் தனது பயங்களை எதிர்கொள்ள ஆரம்பித்தார். முகத்தை மறைப்பதை நிறுத்தினார். தன்னைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிட முயன்றார். சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களைப் பகிரத் தொடங்கினார். தனது வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார். பேரி ரோம்பெர்க் சிண்ட்ரோம் என்றால் என்ன? அது எப்படி ஒருவரின் வாழ்க்கையை மாற்றுகிறது? உடலின் தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடக் கூடாது என்பதையும் தொடர்ந்து எடுத்துரைக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் அவருக்குள் இருந்த பயம், பின்னர் பலருக்கான தைரியமாக மாறியது. “என்னைப் போன்றவர்களும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும்” என்ற செய்தியை அவர் தனது ஒவ்வொரு பதிவிலும் பகிர்ந்தார். சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் ஆயிரக் கணக்கான மக்களிடம் சென்றடைந்தன.
அவரது வாழ்க்கைக் கதையை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்தது. ஆனால் அந்த எண்ணிக்கையைவிட முக்கியமானது, மக்களின் மனதில் ஏற்பட்ட தாக்கம்தான். நூற்றுக்கணக்கானோர் கேயாவுக்கு கடிதம் அனுப்பினர். “உங்கள் கதையைப் பார்த்த பிறகுதான் என் தோற்றத்தை வெறுப்பதை நிறுத்தினேன்”, “நானும் பல ஆண்டுகளாக என் உடலைப் பற்றி வெட்கப்பட்டேன். இப்போது என்னை நான் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்”, “நான் மட்டும் இப்படிப் போராடவில்லை என்பதை உங்கள் கதை உணர்த்தியது” என்று பலரும் பகிர்ந்தனர்.
அந்தப் பதில்கள் கேயாவுக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்தன. ஒருகாலத்தில் தனது முகத்திற்காக அழுத கேயா, இன்று ஆயிரக்கணக்கான மக்களின் முகத்தில் நம்பிக்கையை உருவாக்கும் மனிதராக மாறியிருக்கிறார்.
அவரது சமூக வலைதளப் பக்கங்களுக்கும் இதன் மூலம் அதிக வரவேற்பு கிடைத்தது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் வந்தன. ஆனால் கேயாவுக்கு அவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, “உங்கள் கதை என்னை மாற்றிவிட்டது” என்று ஒருவர் சொல்லும் அந்த ஒரு செய்திதான்.
ஒரு காலத்தில் கண்ணாடியைப் பார்க்கத் தயங்கிய அந்தச் சிறுமி, இன்று உலகமே தன்னைப் பார்க்கத் தயங்க வேண்டாம் என்று தைரியமாக நிற்கிறார். அவரது வாழ்க்கை, உடல் தோற்றம் காரணமாக தன்னம்பிக்கையை இழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கையின் முகமாக மாறியுள்ளது. பலருக்கும் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக பல சந்திப்புகள், தன்னம்பிக்கை கூட்டங்கள் என கேயா இப்போது படு பிஸி.
- நிஷா
