Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வரலாற்று சாதனை

உலக செஸ் அரங்கில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, புதிய வரலாறு படைத்துள்ளார். நார்வேயில் நடைபெற்ற ‘நார்வே செஸ்’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் சர்வதேச செஸ் (கிளாசிக்கல்) 14வது சீசன் நடந்தது. ஆண்கள் பிரிவில் ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ்கார்ல்சன் உள்ளிட்ட 6 பேர் பங்கேற்றனர். ஒன்பது சுற்றுகளின் முடிவில் சோவெஸ்லே (15.5 புள்ளி) முதலிடத்தில் இருந்தார். பிரக்ஞானந்தா (15.0) மற்றும் பிரான்சின் அலிரேசா (14.5) அடுத்தடுத்த 2 இடங்களில் இருந்தனர். குகேஷ் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து 3 போட்டிகளில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். தனது கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மருடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா, 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதலிடத்தில் இருந்த வெஸ்லே-அலிரேசா மோதிய போட்டி, டிராவில் முடிந்தது. இதையடுத்து பிரக்ஞானந்தா, நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்த தொடரின் தொடக்கம் என்பது பிரக்ஞானந்தாவுக்கு சற்று சவாலாகவே இருந்தது. மொத்தம் 10 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில், 6 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் அங்கிருந்து தான், பெரும் எழுச்சி பெற்றார்.

இறுதி 4 சுற்றுகளிலும் தொடர்ச்சியாக எதிராளிகளை வீழ்த்தினார். 10வது மற்றும் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரரான, வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இறுதியில் வின்சென்ட் செய்த தவறுகளை சாதமாக்கி கொண்டார். அதை கவனத்தில் வைத்து மிகவும் நேர்த்தியாக விளையாடினார். இந்த யுக்தி அவருக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் ஆனார். அதேநேரத்தில் இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

உலகின் நம்பர்-1 வீரரான கார்ல்சன் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த தொடரில், அவரது சொந்த மண்ணிலேயே விளையாடி சாம்பியன் பட்டம் வென்று, இந்திய தேசத்திற்கு மகுடம் சூட்டியுள்ளார் பிரக்ஞானந்தா என்பதும் நமக்கான பெருமிதம். கடந்த 2013ம் ஆண்டு முதல் நார்வே செஸ்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், தற்போதைய உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் குகேஷ் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள், இதில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதுவரை எவராலும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியவில்லை. தற்போது இருபது வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா, நமது நீண்ட கால ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் தீர்த்து வைத்துள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகால கனவு என்பது தற்போது நனவாகியுள்ளது. இந்த வகையில் இளம்புயல் பிரக்ஞானந்தா நிகழ்த்தியுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க அளப்பரிய வெற்றிச்சாதனை என்பது, உலக செஸ்ஆர்வலர்களின் பார்வையை இந்திய தேசத்தின் பக்கம் திருப்பியுள்ளது என்றால் அது மிகையல்ல. வாகை சூடிய இந்தியத்தாயின் இளையதமிழ்மகனை வாழ்த்துவோம். வரவேற்று மகிழ்வோம்.