பஞ்சாப்பில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 117 ஆகும். இதில் 93 எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜ பெற்றது. இதனால் அம்மாநிலத்தில் பாஜ ஆட்சிக்கு வருவதற்காக கட்சிகளை உடைக்கும் வேலையில் அமித்ஷா இறங்கி உள்ளார். சமீபத்தில் அமித்ஷா பேசும்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, பாஜ ஆட்சியமைக்கும். மேலும், ஆட்சிக்கு வந்தால் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் தான் பஞ்சாப்பில் ஆபரேஷன் லோட்டஸ் என ஆம் ஆத்மியில் இருந்து எம்பிக்களை பாஜ உடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பிக்கள் இருந்தனர். மாநிலங்களவை துணை தலைவர் ராகவ் சத்தா எம்.பி தலைமையில் 7 மாநிலங்களவை எம்.பிக்களும் இணைந்துள்ளனர். இது, ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் விலகியதால் அவர்களின் பதவி பறிபோகாது என்பதால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. இதற்கிடையே, 7 பேரையும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை தலைவரிடம் மற்றொரு எம்.பி. சஞ்சய் சிங் கடிதம் அளித்துள்ளார். ஆனால் மாநிலங்களவை தலைவரிடம் அளித்த மனு ஏற்கப்படாததால் நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு செய்து உள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவர்களை துரோகிகள் என்று விமர்சித்தார். மேலும் பாஜ, ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிப்பதாகவும், பஞ்சாப் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதிலிருந்து, பஞ்சாப் மீது வன்மம் காட்டி வருகிறார் என்று குறிப்பிட்டார். கொல்லைப்புறமாக மாநிலத்தில் ஆட்சிக்கு வர அனைத்து நடவடிக்கையும் பாஜ எடுத்து வருகிறது. மாநில கட்சிகளை உடைப்பது, பிற கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை சிபிஐ, ஐடி, ஈடி ஆகியவற்றின் மூலம் மிரட்டி பாஜவில் இணைப்பது போன்ற வழிகளில் 20 மாநிலங்களில் பாஜ ஆட்சிக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதைத்தான் மக்களவையில் பிரியங்கா காந்தி கிண்டலாக பேசினார். மக்களவையில் சமீபத்தில் நடந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தின்போது, பிரியங்கா காந்தி, அமித்ஷாவை பார்த்து, “இப்போது உள்துறை அமைச்சர் சிரிக்கிறார்... நீங்கள் அனைத்தையும் பிளான் செய்து வைத்திருக்கிறீர்கள். சாணக்கியர் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், உங்கள் அரசியல் தந்திரத்தை கண்டு அதிர்ச்சியடைந்திருப்பார் ” என்று குறிப்பிட்டார். பிரியங்கா காந்தியின் இந்த சாணக்கியர் பற்றிய விமர்சனத்தை கேட்டு, அமித்ஷா மட்டுமல்லாமல், அவையில் இருந்த பலரும் சிரித்தனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்துக்கு ஏற்ப இதுபோன்று கட்சிகளை உடைக்கும் பாஜவுக்கு விரைவில் பெரிய சம்மட்டி அடி விழும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
